முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழியில் இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது பெண் ஒருவரின் உடற்பாக எச்சங்களும், பெண் மார்பக உள்ளாடையும்,கண்களை மறைத்துக் கட்டப் பயன்படுத்தப் பட்டதாகக் கருதப்படும் துணித் துண்டுகளும், துப்பாக்கிச் சன்னங்களும், மீட்கப்பட்டு தடயப் பொருட்களாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய நாள் ( 06.09.2023) புதன்கிழமை ஆரம்பமான மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப் பட்ட நிலையிலேயே குறித்த எச்சங்கள் புதை குழியில் இருந்து மீட்டெடுக்கப் பட்டுள்ளன.
இதேநேரம் குறித்த புதைகுழியில் காணப்படும் மனித எச்சங்கள் இறுதிப்போரின் போது சிறிலங்கா படைகளிடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அச்ச உணர்வை தமிழ் மக்களிடையே மேலும் அதிகரிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு முன்னர் குறித்த மனிதப் புதை குழியில் இருந்து போராளிகளது என நம்பப்படும் 13, மனித உடற் கூற்று எச்சங்களும், உடைகளும் கண்டெடுக்கப் பட்டு தடயப் பொருட்களாகச் சேகரிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.