வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பதாக ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து இருக்கின்றார்
சாட்சி 1
திருமதி முத்துலிங்கம் கொலஸரிக்கா என்பவர் அளித்த வாக்குமூலத்தில் “எனது மகன் முத்துலிங்கம் மலரவன் அவர்களை 2007ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி இரவு 10.30 மணி அளவில் ஈச்சமோட்டை பகுதியில் உள்ள எனது வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிவில் உடை தரித்த ஏழு பேர் வலுக்காட்டாயமாக அச்சுறுத்தி இழுத்துச்சென்றனர். அவர்களில் மூன்று பேரை அடுத்த நாள் காலை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கண்டேன்” என சொல்லியிருந்தார்
சாட்சி 2
திருமதி இராசேந்திரம் துளசிமலர் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் ” 2007.05.12ம் திகதி பிரதேச செயலகத்திற்கு தந்தையுடன் கடவுச்சீட்டு எடுப்பதற்காக சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது 252-3286 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த படை யினரும், ஈ.பி.டி.பியினரும் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வைத்து எனது மகனை பிடித்துச் சென்றார்கள்” என உறுதிப்படுத்தி இருந்தார்
சாட்சி 3
திரு செல்லையா சுப்பிரமணியம் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் “ஈ.பி.டி.பி யினர் செய்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதியதற்காக தனது மகன் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்களை 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி பருத்தித்துறை கொடிகாமம் சந்தியில் வைத்து இலங்கை ராணுவம் கைது செய்து ஈ.பி.டி.பி யினரிடம் ஒப்படைத்து இருந்த நிலையில் காணமல் போய் விட்டதாக சொல்லி இருந்தார்
சாட்சி 4
திருமதி சுந்தராஜ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் “மனித உரினம மற்றும் அபிரிவிருத்திக்கான மையத்தில் திட்ட மேலாளராக இருந்த சின்னவன் சுந்தரராஜ் என்பவர் பெண்கள் மற்றும் சிறுவர்களை விபச்சாரத்திற்கு கடத்தும் வலையமைப்பு ஒன்றுடன் ஈ பி டி பி க்கு இருந்த தொடர்பை அம்பலப்படுத்தி இருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு மே 7 ஆம் திகதி ஈ.பி.டி.பி யி னாரால் கடத்தப்பட்டதாக சொல்லி இருந்தார்
சாட்சி 5
திருமதி வனிதாஸ் ரதிதேவி என்பவர் சாட்சியமளிக்கையில், 2007ம் ஆண்டு 9ம் மாதம் 5ம் திகதி நள்ளிரவு வீட்டிலிருந்த என் கணவன் வனிதாஸ் அவர்களை ஈ பி டி பி யுடன் வந்த படையினர் விசாரணைக்கென பிடித்து சென்றார்கள். இந்த கடத்தல் குழுவில் இருந்த மகேஸ், தீபன் இருவரையும் எங்கள் பகுதிகளில் இடம்பெற்ற சுற்றி வளைப்புக்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம் என சொல்லி இருந்தார்
சாட்சி 6
தந்தை ஒருவர் அளித்த சாட்சியில் 2006.10.25 அன்று மகன் வீட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் போது நல்லூர் அரசடி இராணுவ முகாமில் பகுதியில் வைத்து ஈ பி டி பி யுடன் சேர்ந்து படையினர் சோதனை செய்தனர் அதன் போது இருவர் என் மகனை பிடித்துள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் பச்சை நிற பிக்கப்பில் எனது மகனை ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர் என கதறினார்
சாட்சி 7
பெயரை வெளியிட விரும்பாத பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் சிவில் உடையணிந்த இராணுவத்தினரும், ஈ.பி.டி.பி ஆட்களும் தன்னுடைய கணவரையும் அவரின் இரு சகோதரர்களையும் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தியதாகவும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை என்றும் சொல்லி இருந்தார்
சாட்சி 8
திருமதி லோகேஸ்வரன் என்பவர் அளித்த சாட்சியில், வேலணை ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் எனும் தனது மகன் 2012 கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்த ஈ.பி.டி.பி யின் சின்னையா சிவராசா ( போல் ) என்பவர அடங்கிய குழுவினாரால் கடத்தப்பட்டதாக சொல்லியிருந்தார்
சாட்சி 9
திருமதி குருநாதன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் , குருநாதன் கேசவன் எனும் பெயருடைய தனது மகன் நெல்லியடியில் உள்ள கடை ஒன்றிற்கு சென்று வீடு திரும்பும் வழியில்,. 2008 டிசெம்பர் மாதம் இருபதாம் திகதி அன்று இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டார் எனவும் பணம் தந்தால் கடத்தப்பட்ட மகனை மீட்டுத் தருவதாக சொன்ன ஈ.பி.டி.பி யின் நெல்லியடி பொறுப்பாளராக இருந்த சுதன் மற்றும் அவரோடு இருந்த வாணி அவர்கள் சொல்வதனை நம்பி ஒரு இலட்சத்து அறுபத்தி ஐயாயியம் ரூபா பணத்தை கொடுத்து ஏமாந்ததாகவும் சொல்லி இருந்தார்
சாட்சி 10
திருமதி க.தர்மநாதன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் தனது கணவர் தர்மநாதன் 2006ம் ஆண்டு ஆவணி மாதம் 8 ம் திகதி தனது வாகனத்துடன் கடத்தப்பட்டார் என்றும் அவருடய வாகனம் வடமராட்சி கிழக்கு பகுதியில் ஈ.பி.டி.பி யினர் தங்கி இருந்த மணற்காடு படைமுகாம் பகுதியில் கடத்தப்பட்ட அன்று காணப்படட்டதாகவும் பின்னர் தனது கணவருடைய வாகனம் மண்டான் படைமுகாமில் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் சொல்லி இருந்தார்
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் போன்ற நூற்றுக்கணக்கான கொடூரன்களுடன் தொடர்புடைய சாட்சிகள் தெளிவான ஆதாரங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களால் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது
ஆனால் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இன்றுவரை விசாரணைக்கு உட்படவில்லை . மாறாக ஒட்டுக்குழுவை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் அமைச்சராக இருக்கின்றார்
குறித்த காலத்தில் இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படைப் பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்கள் பாதுகாப்பது அமைச்சின் செயலாளராக இருக்கின்றார்
அதே போல யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் விமான சேவைகள் நிறுவன தலைவராக இருக்கின்றார். சம காலத்தில் இலங்கை இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களுக்கு நெருக்கமான பாராளமன்ற உறுப்பினராக இருக்கின்றார்
ஜெனரல் சவேந்திர சில்வா முப்படைகளின் தளபதியாக இருக்கின்றார். அதே போல தமிழ் ஒட்டுக்குழுக்களை இயக்கிய இராணுவ புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தேசிய புலனாய்வு நிறுவன பணிப்பாளராக நீடிக்கின்றார் . அதே போல இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண அவர்கள் அரச சலுகைகளுடன் ஓய்வு பெற்று இருக்கின்றார்
இந்நிலையில் கொடூர குற்றாவளிகளை தனது அதிகார வலயத்தில் வைத்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று கொடுப்பேன் என திரு ரணில் விக்ரமசிங்கே உறுதி அளிப்பதை எப்படி நம்ப முடியும் ?