கொரோனா கொடுமையிலும் கொடுமையென
உலகமெல்லாம் மனிதன்
ஓடி ஒழிகிறான்!
மனிதமே இல்லாத மனிதன்
இத்தரணியில் தேவையாவென
கொரோனா விசுவரூபம் எடுத்து
விரட்டியபடி வேகமாக பறக்கிறது!
மனிதன் வாழ்கின்ற சந்து பொந்துகளெல்லாம்
முகாரி இராகம் இசைத்தபடி
அலாதி இன்பத்தில் அலைகிறது
கொரோனா!
முகத்தை மூடியபடி அகத்தை அசுத்தப்படுத்தியவர்
தன் இனத்தை காக்க
தினம் தினம் திண்டாடிக்கொண்டு
இருக்கிறார்!
இப்படித்தானே
அன்றைக்கு கொத்துக்கொத்தாக
நாங்கள்
இரத்தமும் சதையுமாக
கட்டும் மருந்துக்கும் வழியில்லாமல்
திண்டாடின்னாங்கள்
ஒருத்தரும் மருந்துக்கும் மனிதம்
பேசவில்லையே!
ஓடும் புளியம்பழமுமாய் இருக்கும்
எங்களை ஒன்றாய் இருங்கோவென
ஒப்பாரி வைத்த உங்களுக்கு
இனத்துவேச கொரோனாவால் ஒவ்வொருநாளும் கொத்துக்கொத்தாக கொல்லப்படும்
வேளையில்
உயிர்வலியின் ஆழம் புரியவில்லையே!
சுய அரசியலும் சுயவிளம்பரமும்
எங்கள் அழிவின் குருதியில்
சுருதி விலகாது இசைத்தீரே தவிர
தமிழரை தாக்கிய கொடிய கொரோனாவின் தாக்கத்திற்கு
இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லையே
ஓரவஞ்சக உலகம்!
இப்போது
தன் சுவாசத்தை துளைக்கும் கொரோனாவின் தாக்கத்திற்கு
மருந்துத் தட்டுப்பாடு வருமென
வருந்துகிறது!
வார்த்தைக்கு வார்தை ஊடகப்பரப்பில் ஊதிப்பெருப்பித்து
உயிர்ப்பலியை தடுக்க முனைகிறது!
ஆனாலும்
கொரோனாவும் விட்டபாடில்லை
கட்டுக்கடங்காத ஆசைகளோடு
நாடுநாடாய் கடக்கிறது!
என்னசெய்வது
மண்ணைவிட்டு ஓடிவந்த குற்றம்
எம்மையும் இந்த கொரோனா
உரசி பார்க்கத்தான் போகிறது!
காரணம்
எமக்குள்ளும் மனிதம்
இப்போது இறந்துதான்
போய்விட்டது!
அதனால்
கொரோனாவுக்கு கொஞ்சம்
கோபம் இருக்கத்தான்
செய்யும்!
நடப்பது நடக்கட்டும்
நான் ரொம்ப துணிஞ்சவன்ரா
என்று நெஞ்சை நிமிர்த்தி நடந்தாலும்
கொஞ்சம் படக்கு படக்கு என்று
அடிக்கத்தான் செய்கிறது!
ஏனென்றால்
நாங்கள் உயிருக்கு பயந்தவர்
ஆச்சே…
✍தூயவன்