கொரோனாவின் தீவிரத்தை இலங்கையர் உணரவேண்டும்!

You are currently viewing கொரோனாவின் தீவிரத்தை இலங்கையர் உணரவேண்டும்!


கொரோனா வைரஸின் மிகச் சமீபத்திய எழுச்சியைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு இலங்கையர்களை உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்துக்கான பொறுப்பதிகாரி டாக்டர் ஒலிவியா நிவேரஸ் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலை மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கலாம் எனவும் அவா் எச்சரித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள டாக்டர் ஒலிவியா நிவேரஸ் , இலங்கையில் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முன்னணி சுகாதார பணியாளர்கள், அரசு மற்றும் சுகாதார அமைச்சு அயராது உழைத்து வருவதாகத் தெரிவித்தார்.

தீவிரமாக அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும் உயிர்களைக் காப்பாற்றவும் இலங்கைக்கு உதவ உலக சுகாதார அமைப்பும் ஐக்கிய நாடுகள் சபையும் தயாராக இருப்பதாகவும் அவா் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்த தனியே சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் மட்டும் முடியாது. அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும் எனவும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்துக்காக பொறுப்பதிகாரி டாக்டர் ஒலிவியா நிவேரஸ் தெரிவித்தார்.

உலகெங்கும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் சில முக்கிய விடயங்கள் பங்களிப்புச் செய்வதற்கான ஆதாரங்கள் உள்ளன.

நெரிசலான இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். குறைந்த இடவசதி கொண்ட மற்றும் மூடிய இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். தனி நபர்களுக்கு இடையே நெருங்கிய தொடர்புகளைத் தவிா்க்க வேண்டும். இவையே தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் அல்லது தொற்று நோயில் இருந்து தப்பிக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்றன எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.

சமூக இடைவெளியை பராமரித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்தல் மற்றும் முக கவசம் அணிதல் என்பவையும் தொற்று நோயில் இருந்து தப்ப முக்கிய விடயங்களாக உள்ளன.

எம்மையும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் எங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க இந்தப் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் எங்கள் பங்களிப்பை சரியாகச் செய்தால் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர முடியும் எனவும் உலக் சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்துக்கான பொறுப்பதிகாரி டாக்டர் ஒலிவியா நிவேரஸ் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொண்டுள்ள மிகவும் சவாலான நெருக்கடி இந்த தொற்றுநோயாகும் எனவும் நிவேரஸ் மேலும் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply