கொரோனா வைரஸ் அபாயம் முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடத்துவதற்காக காத்திருக்க முடியாது என தெரிவித்துள்ள பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தேர்தல் காலத்தில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சார கூட்டங்களிற்கு தடை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிற்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் தேர்தல் ஆணையகத்துடன் இணைந்து செயற்பட தயார் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முற்றாக ஒழிக்கப்படும் வரை காத்திருப்பது சாத்தியமற்ற விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் ஏதோ ஒரு கட்டத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என ரோகனஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முற்றாக ஒழிக்கப்படும் வரை காத்திருப்பது சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பது முதல் வாக்குச்சீட்டுகளை எண்ணுவது வரையிலான ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் நாங்கள் ஆராய்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெருமளவானவர்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் இவை என குறிப்பிட்டுள்ள ரோகன ஹெட்டியராச்சி இந்த நடவடிக்கைகளின் போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றைய நபருக்கு நோய் தொற்றுவதை தடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்
ஒரு குறிப்பிட்ட கட்சியால் வாக்கு எண்ணப்படும் நிலையத்திற்கு தனது ஐந்து முகவர்களை அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் பெருமளவானவர்கள் காணப்படுவது வழமை என சுட்டிக்காட்டியுள்ள ரோகன ஹெட்டியாராச்சி வாக்குகளை எண்ணுவதில் வெளிப்படை தன்மையை பேணும் அதேவேளை வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் காணப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்படுவதை வெளியிலிருந்து கண்காணிப்பதற்கு கமராவை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரச்சாரகூட்டங்கள் பேரணிகளை தடை செய்யவேண்டும்,இது அனைத்து கட்சிகளிற்கும் பொருந்தும் என்பதால் எவருக்கும் அநீதியானதாக இது காணப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.