கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் செயலாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்றுத் தேர்தல்கள் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இரண்டு பகுதிகளாக இந்தச் சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் திகதி ஜூன் 20 எனத் தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்கள்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்தலின் திகதி, கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடாமல் – சுகாதார, மருத்துவத் தரப்புகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமல் – எப்படி தீர்மானிக்கப்பட்டது என ஆணைக்குழுவின் தலைவரிடம் அவர்கள் கேள்வியயழுப்பினர். கட்சிகளின் செயலாளர்கள் முன்வைத்த கேள்விகளால் திணறிப்போனார் ஆணையாளர்.
கொரோனா அச்சம் நீங்கும் வரை தேர்தலைத் தான் நடத்தப்போவதில்லை என்று அவர் கட்சிகளின் செயலாளர்களிடம் உறுதியளித்தார். இந்தத் தீர்மானத்தை நீங்கள் மக்களுக்குப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரைக் கேட்டுக்கொண்டனர். அதற்கும் அவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.