“கொரோனா” வைரஸை எதிர்த்துப்போராடும் எதிர்ப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியின் முதல் பரிசோதனை மருந்து, மனிதர்களில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் “Seattle” மாநிலத்திலுள்ள மருந்து நிறுவனம் இதற்கான முதல் தொகுதி சோதனை மருந்துகளை வழங்கியுள்ளதாக “AP” செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, “Jennifer” என்ற 45 வயதுடைய அமெரிக்க பெண்மணியொருவர்மீது முதலாவது சோதனை நடத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 35 மருந்து நிறுவனங்கள், “கொரோனா” எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான தீவிர சோதனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், “கொரோனா” வைரஸின் உயிரியல் கட்டமைப்பு பற்றி சீன ஆய்வாளர்கள் ஏற்கெனவே கண்டறிந்திருந்த அரிய தகவல்கள், இச்சோதனைகளுக்கு பேருதவியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே, மேற்படி அமெரிக்க மருந்து நிறுவனம் சோதனைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதோடு, மனிதர்கள்மீதான சோதனைக்கான முதல் தொகுதி மருந்துகளை வழங்கும் நிலைக்கு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்கள் மீதான பரிசோதனைகள் மூன்று கட்டங்களாக நடத்தப்படுமெனவும், இதற்காக தேகாரோக்கியமுள்ள 45 தன்னார்வ இளவயதினர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
மூன்று கட்டங்களாக நடைபெற உத்தேசிக்கப்பட்டிருக்கும் இப்பரிசோதனைகள், முதற்கட்டமாக, பரிசோதிக்கப்படும் மாதிரி மருந்து பின் விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும், இரண்டாம் கட்டமாக, மருந்தின் வினைத்திறனை அறியும் பொருட்டு, “கொரோனா” பாதிப்பால் பீடிக்கப்பட்ட இடங்களில் தெர்ந்தெடுக்கப்படும் நோயாளிகளில் 100 பேருக்கு கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட இருப்பதாகவும், மூன்றாம் கட்டமாக, வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்ட 1000 பேருக்கு கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சோதனைகள் வெற்றியளித்தாலும் எதிர்ப்பு மருந்து வைத்திய ரீதியிலான பாவனைக்கு வருவதற்கு 18 மாதங்கள் எடுக்குமெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ பாவனைக்கென மருந்துகள் வெளிவந்தாலும், தேவைப்படும் அத்தனை பேருக்கும் மருந்துகளை உடனடியாக வழங்குவது சிக்கலான காரியமாக அமையுமெனவும், முதல் கட்டமாக, சுகாதாரப்பணியாளர்கள், சமூகசேவையாளர்கள், உடல்நிலையில் பாரிய பாதிப்புக்களை கொண்டிருப்பவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் போன்றவர்களே முக்கியத்துவம் கொடுக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.