TV 2 மற்றும், தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து, ஒஸ்லோவில் உள்ள சுகாதார ஊழியர்களிடையே மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நெருக்கடியின் போது பணியில் பாதுகாப்பின்மையை உணர்ந்ததாக பதிலளித்துள்ளனர்.
இங்கு மிக மோசமான எடுத்துக்காட்டு என்னவென்றால், முகக்கவசம் முடிந்த காரணத்தினால், தாதி ஒருவருக்கு நீல நிற பாதணி கவசத்தை முகக்கவசமாக பயன்படுத்தும்படி கூறப்பட்டதுதான் என்று ஒஸ்லோவில் உள்ள சேவை மற்றும் பராமரிப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் ‘Siri Follerås‘ கூறியுள்ளார்
TV2, தொழிற்சங்க கூட்டமைப்பு ஊடாக ஒஸ்லோவில் சுகாதார மற்றும் பராமரிப்புத் துறையில் பணிபுரியும் அதன் உறுப்பினர்களிடம் பல கேள்விகளைக் கேட்டிருந்தது.
இந்த கேள்விகளுக்கு, 9,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில், 473 பேர் ஏப்ரல் 4 முதல் 6 வரையிலான மூன்று நாட்களில் பதிலளித்துள்ளனர்.
- 36 விழுக்காடு ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் இடங்களில் தொற்று கட்டுப்பாட்டு விதிகள் மீறப்பட்டதாக கூறியுள்ளனர்.
- 27 விழுக்காடு ஊழியர்கள், தாங்கள் தேவையில்லாமல் தொற்றுநோயை எதிர்கொள்ளும் அபாயத்தை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.
- 57 விழுக்காடு ஊழியர்கள், அதாவது பத்தில் ஆறு பேர், கொரோனா தொற்றுநோய் காரணமாக வேலையில் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்
நோய்த்தொற்று பாதுகாப்பு கருவிகளின் பற்றாக்குறையானது சுகாதார அமைப்பு முழுவதுக்கும் ஒரு முக்கிய கவலையாக உள்ளது என்று தொழிற்சங்கத்தின் தலைவர் ‘Siri Follerås‘ மேலும் கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: TV2