மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேவேளையில் இன்று ஒரே நாளில் புதிதாக நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையை விட தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,119ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 156 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 166 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள 2,567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. “மலேசியாவில் இதுவரை 1,487 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த நோயாளிகளில் 36 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்பது நல்ல தகவல். மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 22 நாட்கள் ஆகிறது. இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விரைவில் தெரியவரும்” என நூர் இஷாம் தெரிவித்தார்.
வரும் 10ஆம் தேதி மலேசிய அரசு இது தொடர்பாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “போரில் வெற்றி பெறவில்லை என்றாலும், மலேசியா இன்னும் தோற்றுவிடவில்லை”, “கோவிட் 19 நோய்க்கு எதிரான போரில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. அதேசமயம் மலேசியா இன்னும் தோற்றுவிடவில்லை” என்றார் நூர் இஷாம். ஒவ்வொரு நாளும் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, குணமடைபவர்களின் எண்ணிக்கை, நோய்த்தொற்று எவ்வாறு பரவுகிறது எனப் பல்வேறு விஷயங்களைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். எந்த மாநிலம், எந்த மாவட்டம் அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதும் கவனிக்கப்படுகிறது.
“இதுவரை நோய்த்தொற்று அதிவேகமாகப் பரவவில்லை. எனவேதான் இந்தப் போரில் நாம் வெற்றி பெறவில்லை என்றாலும் நாம் தோல்வி அடையவில்லை எனக் குறிப்பிடுகிறேன்,” என்றார் நூர் இஷாம். பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருமா? என்று செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது தொடர்பான தனது கருத்து எதையும் முடிவு செய்யாது என்றார்.