உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது.
உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறது உலக சுகாதார நிறுவனம்.
அவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த தொற்றுகள், மரணங்கள் மற்றும் முந்தைய 24 மணி நேரத்தில் நிகழ்ந்த தொற்றுகள், இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
மத்திய ஐரோப்பிய நேரப்படி மார்ச் 21 நள்ளிரவு 11.59க்கு வெளியிடப்பட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் 26,069 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதே காலத்தில் 1,600 பேர் இந்த நோயால் இறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 1,600 பேர் மரணம் என்பது இந்த கொரோனா வைரஸ் சிக்கல் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். புதிதாக நோய் தொற்றியோர் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருந்தாலும், இது முந்தைய நாளைவிட சற்றே குறைவு ஆகும்.
மார்ச் 20 தேதியிட்ட முந்தைய அறிக்கைப்படி முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக நோய்த் தொற்றியவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரமாக இருந்தது. ஆனால், ஒரே நாள் புள்ளிவிவரத்தை வைத்து புதிதாக நோய்த் தொற்றுகிறவர்கள் எண்ணிக்கை மட்டுப்படத் தொடங்கிவிட்டதாக முடிவுக்கு வர முடியுமா என்பது சந்தேகமே.
ஒட்டுமொத்த தொற்று, இறப்பு
இதுவரை உலகில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற தகவல்களைப் பொறுத்தவரை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளிக்கும் புள்ளிவிவரப்படி இந்திய நேரப்படி இன்று காலை 7:13 வரை உலகில் 3,35,997 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 98,333 பேர் குணமடைந்துவிட்டனர். 14,641 பேர் இதுவரை இறந்துள்ளனர்.
சீனாவில் தொற்று தொடங்கியது முதல் இதுவரையிலான புள்ளிவிவரம் இது.
இந்தியாவை பொறுத்தவரை, இதுவரை கொரோனா வைரஸால் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.