“கொரோனா” வைரஸின் பரவலுக்கு சீனாவே முழுக்கரணமென குற்றம் சாட்டப்படுவதை மறுதலித்துள்ள சீனா, இவ்வருட ஆரம்பத்தில் வேகமாக பரவிய “கொவிட்-19 / கொரோனா” வைரஸின் பரவலுக்கு பல்வேறு நாடுகளும் காரணமாக இருந்திருக்கின்றன என தெரிவித்துள்ளது.
இலகுவில் விடை காணமுடியாத சிக்கலான அறிவியல் பூர்வமான ஆய்வொன்றின் மூலம் தான் இதனை கூறமுடியுமென தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறையின் பேச்சாளரான “Zhao Lijian” தெரிவித்துள்ளார்.
பல நாடுகளை உள்ளடக்கிய வேலைத்திட்டமொன்றின் பின்னணியில், இது நடந்திருக்க வாய்ப்புள்ளதெனவும் கருத இடமுண்டு எனவும் தெரிவித்திருக்கும் அவர், இதற்கு விடைகாணும் பொறுப்பு ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், “கொரோனா” வைரஸ் பரவலுக்கு முற்று முழுதாக சீனாவை பொறுப்பாளியாக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானியாவின் “The Times” பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2019 செப்டம்பர் மாதத்திலேயே இத்தாலியில் “கொரோனா” வைரஸ் அவதானிக்கப்பட்டுள்ளதாக குறிப்புக்கள் வெளிவந்திருப்பதால், வைரஸ் பரவலுக்கு சீனாவே முழுவதும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுவது தவறானதென தெரிவித்துள்ள சீனா, இத்தாலியில் எடுக்கப்பட்ட இரத்த மாத்திரிகளின் பரிசோதனை முடிவின்படி, சீனாவின் “Wuhan” மாகாணத்தில் “கொரோனா” வைரஸ் அவதானிக்கப்படுவதற்கு பல மாதங்கள் முன்னதாகவே, அதாவது 2019 செப்டம்பர் மாதத்திலேயே இத்தாலியில் “கொரோனா” வைரஸ் அவதானிக்கப்பட்டுள்ளமை கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
இத்தாலிய ஆய்வுகளின் விபரங்களை விமர்சிக்கும் ஆய்வாளர்கள், “கொரோனா” வைரஸின் பரவல் மற்றும் அதன் அதீதமான ஆபத்துக்கள் பற்றிய விபரங்களை சீனா உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் வெளிப்படுத்தாமல் மறைத்ததை சுட்டிக்காட்டியுள்ளதோடு, வட இத்தாலியோடு மிகவும் இறுக்கமான வர்த்தக தொடர்புகளை கொண்டிருக்கும் சீனாவின் இந்த வாதம் ஏற்றுக்கொள்வதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்.
மேற்படி விடயம் பற்றி கருத்துரைத்துள்ள உலக சுகாதார நிறுவனம் (WHO), சீனாவின் “Wuhan” மாகாணத்திலிருந்து “கொரோனா” வைரஸ் பரவல் அவதானிக்கப்படுவதற்கு முன்னதாக “கொரோனா” வைரஸ் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லையென்றாலும், இதற்கு முன்னதாகவே வேறு நாடுகளில் “கொரோனா” வைரஸ் இருந்திருக்கும் வாய்ப்புக்களையும் மறுக்க முடியாதென கருத்துரைத்துள்ளது.