சொந்த கட்சியில் சோபையிழக்கும் ஒஸ்லோ நகர துணை மேயர்! கட்சியின் தெரிவுக்குழுவோடு முரண்பாடு!!

You are currently viewing சொந்த கட்சியில் சோபையிழக்கும் ஒஸ்லோ நகர துணை மேயர்! கட்சியின் தெரிவுக்குழுவோடு முரண்பாடு!!

எதிர்வரும் நோர்வே நாடாளுமன்ற தேர்தலுக்கான, “தொழிலாளர் கட்சி (Arbeiderpartiet / AP)” யின் ஒஸ்லோ நகர வேட்பாளர் பட்டியலை நிறைவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் ஒஸ்லோ நகர வேட்பாளர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்கான போட்டாபோட்டியில், இரண்டாவது இடத்தை பெறுவாரென எதிர்பார்க்கப்பட்ட, அக்கட்சியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ஒஸ்லோ நகர துணை மேயர் “கம்சாயினி குணரத்தினம்”, ஒஸ்லோ நகர வேட்பாளர் பட்டியலில் 4 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்த தகவல் முன்னதாக கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவால் வெளியிடப்பட்டிருந்தது.

1 ஆம் இடத்தை கட்சியின் தலைவர் “Jonas Ghar Støre” பெற்றுக்கொள்ள, 2 ஆவது இடத்தை “கம்சாயினி குணரத்தினம்” பெற்றுக்கொள்வாரென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், கட்சியின் தெரிவுக்குழுவின் ஏகமனதாக முடிவின் படி, வேட்பாளர் பட்டியலின் 2 ஆவது இடம், கட்சியின் இன்னொரு உறுப்பினரான “Zeinab Al – Zamarai” ஏன்னு பெண்மணிக்கு வழங்கப்பட்டதோடு, “பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “கம்சாயினி குணரத்தினம்” 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

இதேவேளை, முன்னதாக “கம்சாயினி குணரத்தினம்” பெற்றுக்கொண்ட 4 ஆவது இடத்திற்கு இன்னொரு கட்சி உறுப்பினரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், 4 ஆவது இடமும் மற்றைய உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவின் மேற்படி பரிந்துரைகள் சிலவாரங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.

இது இவ்வாறிருக்க, 24.11.2020 அன்று வெளிவந்திருக்கும் புதிய தகவல்களின்படி, “கம்சாயினி குணரத்தினம்” கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியலில் 4 ஆவது இடத்திலிருந்து 7 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனக்கு வழங்கப்பட்ட 7 ஆவது இடத்தை “கம்சாயினி குணரத்தினம்”ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், கட்சியின் வேட்பளர் தெரிவுக்குழு ஏகமனதாக வேட்பாளர் பட்டியலை வெளியிடும் எனவும், எனினும், 7 ஆவது இடத்தை தவிர்த்து, 2 ஆவது இடத்துக்கு “கம்சாயினி குணரத்தினம்” போட்டிபோடுவாரானால், ஏற்க்கெனவே 2 ஆவது இடம் வழங்கப்பட்டிருக்கும் “Zeinab Al – Zamarai” என்பவரோடு, “கம்சாயினி குணரத்தினம்” கடும் போட்டி போடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சொந்த கட்சியில் சோபையிழக்கும் ஒஸ்லோ நகர துணை மேயர்! கட்சியின் தெரிவுக்குழுவோடு முரண்பாடு!! 1
“Zeinab Al – Zamarai”

ஏற்கெனவேதெரிவுக்குழுவால் 2 ஆவது இடத்துக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ள “Zeinab Al – Zamarai” என்ற அப்பெண்மணியோடு அதே 2 ஆவது இடத்துக்கு “கம்சாயினி குணரத்தினம்” மோதுவாரானால், போட்டி வாக்கெடுப்பு கட்சிக்குள் அல்லது தெரிவுக்குழுவுக்குள் இடம்பெற வாய்ப்புள்ளதெனவும், அப்படியானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் தெரிவுக்குழுவின் ஆதரவை பெற்றுள்ள “Zeinab Al – Zamarai” வெற்றி பெறும் வாய்ப்புக்களே அதிகமெனவும் எதிர்வுகள் கூறப்படுகிறது.

எப்படியாயினும் எதிர்வரும் 01.12.2020 அன்று இறுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுமெனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, வேட்பாளர் பட்டியலில் தனக்கு 2 ஆவது இடம் வழங்கப்பட வேண்டுமென்ற பொருள்பட “கம்சாயினி குணரத்தினம்” சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட குறிப்பொன்று, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிடுவது போல அவரது கருத்துப்பகிர்வுகள் உள்ளதாகவும், ஏற்க்கெனவே சிக்கலாக உள்ள வேட்பாளர் பட்டியல் விடயத்தை மென்மேலும் சிக்கலாகும் விதத்தில் அவரது கருத்துக்கள் இருப்பதாகவும் கட்சிக்குள் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சொந்த கட்சியில் சோபையிழக்கும் ஒஸ்லோ நகர துணை மேயர்! கட்சியின் தெரிவுக்குழுவோடு முரண்பாடு!! 2
“கம்சாயினி குணரத்தினம்” VS “Zeinab Al – Zamarai”

மூலம்:

https://www.dagbladet.no/nyheter/presses-nedover-pa-ap-lista/73103946

பகிர்ந்துகொள்ள