“கொரோனா” பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த நோர்வே! பாராட்டும் பேராசிரியர்!!

You are currently viewing “கொரோனா” பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த நோர்வே! பாராட்டும் பேராசிரியர்!!

“கொரோனா” வைரஸின் பரவல் நோர்வேயில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பது தொடர்பில் நோர்வே மக்கள் பெருமையடைய வேண்டுமென, வட நோர்வேயின் “Tromsø” பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் மருத்துவ பேராசிரியராகவிருக்கும் “Ørjan Olsvik” தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே நோர்வேயிலும் “கொரோனா” பரவியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், 100 இருக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருப்பது கவலைக்குரியதென்றாலும், ஒரு நிலைக்குமேல் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதும், எஞ்சியுள்ள மக்களை காப்பதில் முனைப்பான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியவை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

முழுவீச்சில் தேவையான பரிசோதனைகளுக்கு நோயாளிகளும், சுகாதார சேவையாளர்களும் உள்ளாக்கப்பட்டிருந்தமை சிறப்பான முன்னுதாரணமாக கொள்ளப்பட முடியுமென தெரிவிக்கும் பேராசிரியர் ” Ørjan Olsvik”, குறிப்பாக, “கொரோனா” வைரஸின் பரவல் அதிகமாக அவதானிக்கப்பட்ட தலைநகர் ஒஸ்லோ தனிமைப்படுத்தப்பட்டமை மிகச்சிறப்பானதும், வைரஸ் பரம்பல் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கான பிரதான காரணங்களுள் ஒன்றானதெனவும் குறிப்பிடுகின்றார்.

இத்தாலி, சுவீடன் போன்ற நாடுகளில் பெரும்பாலான “கொரோனா” தொற்று வைத்தியசாலைகளில் இருந்தே தொற்றியமையை குறிப்பிட்டுள்ள பேராசிரியர், நோர்வேயிலும் ஆரம்ப கட்டத்தில் சுமார் 9000 சுகாதார சேவையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், பின்னாளில் அனைவரும் தன்னார்வலர்களாக மாறி “கொரோனா” வுக்கெதிரான போரில் தம்மை இணைத்துக்கொண்டமையை பெருமையோடு நினைவுகூருகிறார்.

தலைநகர் ஒஸ்லோவில் மாத்திரம் சுமார் 2000 பேர் வரையில் தொற்றுக்கு ஆளாகியிருப்பதோடு, 24 பேர்வரை மரணமாகியுள்ள நிலையில், வைரஸின் பரவல் மீண்டும் தலைதூக்குமானால், ஒஸ்லோ நகரத்தை முற்றாக மூடவேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்திருக்கும் பேராசிரியர் “Ørjan Olsvik”, அதிகளவில் வைரஸ் பரவலை அவதானித்ததால் “Finland / பின்லாந்து” நாடானது தனது தலைநகரமான “Helsinki / ஹெல்ஸின்கி” யை மூடியதாலேயே அந்த நாட்டில் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இதனாலேயே அந்த நாடு புகழப்படுவதாகவும் தெரிவிக்கிறார்.

“கொரோனா” பரவலால் முடங்கிப்போயுள்ள நோர்வேயில், புனித தவக்காலமான “Easter / ஈஸ்டர்” வாரத்துக்குப்பின் கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்பட்டு சுருவர் பாடசாலைகள், குழந்தைகள் காப்பகங்கள் போன்றவை மெல்ல மெல்ல மீண்டும் திறக்கப்படவிருக்கும் நிலையில், எதிர்வரும் கோடைகாலத்தில் வைரஸின் தாக்கம் மீண்டும் எழலாமென்ற அச்சம் வெளியிடப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர், நிலைமைகள் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமானதெனவும் எச்சரித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள