நோர்வேயில் “கொரோனா” வைரஸின் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நோர்வேயின் சுகாதார அமைச்சர் “Bent Høie” அறிவித்துள்ளார்.
இறுதிக்கணக்கெடுப்புக்களின்படி, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு “கொரோனா” வைரஸ் பரவும் விகிதம் 0.7 சதவிகிதமாக இருப்பதாகவும், இதன் அடிப்படையில், நோர்வேயில் “கொரோனா” பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்பட முடியுமெனவும் தெரிவித்துள்ள நோர்வே சுகாதார அமைச்சர், அரசினால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் இதற்கு பெரும் உதவியாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் “கொரோனா” பரவத்தொடங்கியபோது, இப்பரவல் விகிதம் 2.5 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது நடைமுறையிலுள்ள அரசினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும், விதந்துரைகளையும் உடனடியாக விலக்கிக்கொள்வது ஏற்புடையதாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சரின் இக்கருத்து பற்றி, நோர்வே சுகாதார அமைப்பின் இயக்குனர் “Camilla Stoltenberg” தெரிவிக்கும் போது, “கொரோனா” தொற்றுதலினால் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் (Intensive Care) அனுமதிக்கப்படுபவர்களின் விகிதாசாரம் குறைவடைந்து வருவது சுகாதார அமைச்சரின் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைகிறதென தெரிவித்துள்ளதோடு, தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளும், விதந்துரைகளும் இளக்கப்படுமானால், “கொரோனா” பரவலின் விகிதாசாரம் மீண்டும் வேகமெடுக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.