ஜெர்மனியில் உணவு கிடைக்காமல் உயிரியல் பூங்கா விலங்குகள் பரிதவித்து வருகின்றன.
ஜெர்மனியில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த கொடிய வைரசுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து, மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் உயிரியல் பூங்காக்களும் அடங்கும்.
அதன்படி அந்த நாட்டின் வடக்கு பகுதியில் ஹம்பர்க் (Hamburg) நகரில் உள்ள டையர்பார்க் (Tierpark) என்ற உயிரியல் பூங்கா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் வராததால் வருமானம் பாதிக்கப்பட்டு உயிரியல் பூங்கா கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் 700-க்கும் அதிகமான விலங்குகளுக்கு உணவு அளிக்க முடியாமல் உயிரியல் பூங்கா நிர்வாகம் திணறி வருகிறது.
வரும் நாட்களிலும் இதே நிலை நீடித்தால் பூங்காவில் உள்ள ஒரு சில விலங்குகளை கொன்று அதை மற்ற விலங்குகளுக்கு இரையாக்க வேண்டிய அவல நிலை ஏற்படும் என அந்த உயிரியல் பூங்காவின் தலைமை இயக்குனர் வெரேனா காஸ்பாரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.