“கொரோனா” வைரசுக்கும், 5G அலைக்கற்றைகளுக்கும் தொடர்பிருப்பதாக புரளிகள் பரப்பப்பட்டதால் பிரித்தானியாவில் 5G அலைக்கற்றை கோபுரங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்களுக்கு இருக்கக்கூடிய “கொரோனா” வைரசை எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்தியை 5G அலைக்கற்றைகள் குறைப்பதாகவும், தமது தொடர்பாடலுக்காக 5G அலைக்கற்றையை பயன்படுத்தும் “கொரோனா” வைரசுக்கள், இவ்வலைக்கற்றையின் மூலமாகவே தமது நோயாளிகளை தேர்ந்தெடுக்கின்றன எனவும் சமூகவலைத்தளங்களூடாக பரப்பப்பட்ட காணொளிகள் மற்றும் தகவல்களினால் கோபமடைந்தவர்களால் பிரித்தானியாவில் “Birmingham, Liverpool” மற்றும் “Melling inn Meyerside” உள்ளிட்ட இடங்களில் இதுவரை 5 கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், தொலைத்தொடர்பு நிறுவனமான “Vodafone” தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூகவலைத்தளங்களான You Tube, Facebook, Twitter, Tik Tok போன்ற நிறுவனங்களை அழைத்து உரையாடிய பிரித்தானிய அமைச்சர் “Oliver Dowden”, அறிவுபூர்வமற்ற மேற்படி புரளித்தகவல்கள் பரவுவதை சமூகவலைத்தளங்கள் நிறுத்துவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுள்ளார்.