“கொரோனா” வைரசுக்களுக்கெதிரான காத்திரமான மருந்தொன்றை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் உலகமே இறங்கியுள்ள நிலையில், “போலியோ” மற்றும் “காச நோய்” தடுப்பு மருந்துகள் “கொரோனா” வுக்கெதிராக பயன்படுத்தப்படலாமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
“போலியோ” எனப்படும் சிறுபராயத்தில் வரும் உடல் முடக்கநிலைக்கு எதிராக பாவிக்கப்படும் எதிர்ப்புமருந்து மற்றும் காச நோய்க்கு பாவிக்கப்படும் “BCG / Bacillus Calmette–Guérin” எதிர்ப்புமருந்து ஆகியவை, “கொரோனா” வைரஸை ஆரம்பநிலையில் எதிர்த்துப்போராடக்கூடியவை என ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
“AP / Assosciated Press” செய்திநிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, பல்லாண்டுகளுக்கு முன்பு, “BCG Vaccine” தடுப்புமருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் பல்லாண்டுகள் கடந்தபின்பும் பல்வேறு வகையான வைரசுக்களுக்கெதிராக நோயெதிர்ப்பு சக்தியோடு இருப்பதாகவும், வாய்மூலமாக கொடுக்கப்படும் “போலியோ” எதிர்ப்பு சொட்டு மருந்தானது, “கொரோனா” வைரஸை எதிர்க்கும் நிலையில் உடலை வைத்திருக்கும் எனவும் அறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
விசேடமான வைரசுக்களை எதிர்த்து போராடுவதற்கான முதற்கட்ட எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே மேற்படி இரு எதிர்ப்பு மருந்துகளும் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இம்மருந்துகள் தொடர்பான மேம்படுத்தப்பட்ட தீவிர ஆய்வுகள், “கொரோனா” வுக்கெதிரான காத்திரமான மருந்தொன்றை கண்டறிவதை விரிவுபடுத்துமென நம்புவதாக, நெதர்லாந்தின் “Radboud” பல்கலைக்கழகத்தை சேர்ந்த வைத்தியரான “Mihai Netea” குறிப்பிட்டுள்ளதோடு, அவர் நெறிப்படுத்தும் சோதனை முயற்சியொன்றுக்காக 1500 சுகாதார சேவையாளர்களுக்கு “BCG Vaccine” தடுப்புமருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைரசுக்களுக்கான உலக மையமான “Global Virus Networks” அமைப்பின் நிறுவனரான வைத்திய நிபுணர் “Robert Gallo” தெரிவிக்கும்போது, போலியோ தடுப்புமருந்தை மேம்படுத்தும் பரவலான சோதனைகள் எதிர்காலத்தில் முனைப்போடு மேற்கொள்ளப்படுமெனவும், வரசுக்களுக்கெதிரான எதிர்ப்புநிலையை குறுகிய காலத்தில் கொடுக்கக்கூடிய முறைமையொன்றை கண்டறிவதோடு, பக்கவிளைவுகளெதையும் கொடுக்காத விதத்திலும் தடுப்புமருந்து கண்டறியப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
“BCG Vaccine” இன்னமும் பரந்துபட்டளவில் பாவனையில் இருக்கும் நாடுகளில், ஏனைய நாடுகளை விடவும் குறைவான அளவிலேயே “கொரோனா” பரவல் இருப்பதாக கடந்தகாலங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம் (WHO), எனினும், மேற்குறிப்பிட்ட இரு தடுப்புமருந்துகளும் “கொரோனா” வைரசுக்கெதிராக காத்திரமான எதிர்ப்பை காட்டுவதாக இன்னமும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாததால், நோயாளிக்கு இவ்வெதிர்ப்பு மருந்துகளை கொடுக்கவேண்டாமெனவும், அதேவேளையில், மேற்படி எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான மேலதிக ஆய்வுகளை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.