சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த அச்சத்தை உருவாக்கவும் , பரப்பும் வகையிலும் அமெரிக்கா செயல்படுகிறது என சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுவுடன், அங்கிருந்து முதன் முதலில் தங்கள் நாட்டவரை மீட்ட நாடு அமெரிக்கா. சீனாவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பயண அறிவுரையையும் அமெரிக்கா தான் முதன் முதலில் வழங்கியது.
இதேபோல, அண்மையில் சீனாவுக்கு சென்று வந்த வெளிநாட்டவர்கள், தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது என அமெரிக்கா நேற்று தடை விதித்தது.
பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்-யிங் கூறியதாவது:-
உதவியை வழங்குவதற்குப் பதிலாக, சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த அச்சத்தை உருவாக்கவும், பரப்பம் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மீறி, பயணம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அதீத கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
அமெரிக்கா தனது தூதரக ஊழியர்களை ஓரளவு திரும்பப் பெற பரிந்துரைத்த முதல் நாடு, சீனப் பயணிகள் மீது பயணத் தடையை விதித்த முதல் நாடு ஆகும்.
இது ஒரு மோசமான எடுத்துக்காட்டு. நியாயமான, அமைதியான மற்றும் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளை மற்ற நாடுகள் எடுக்கும் என்று சீனா நம்புகிறது என கூறினார்.