கொரோனோ பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு பறித்தது : சீமான் கண்டனம்!

  • Post author:
You are currently viewing கொரோனோ பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு பறித்தது : சீமான் கண்டனம்!

”சோதனைச் சாதனங்களையும் வாங்கக் கூட மத்திய அரசை சார்ந்தே இருக்க நிர்பந்திப்பது தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு தன் அடிமையாக கருதுவதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.”

தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“கொரோனா நோய்த்தொற்று பரவலால் இந்தியாவிலேயே அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிற மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்திலிருக்கிற இவ்வேளையில், நோய்த்தொற்று குறித்து சோதனை செய்ய சீனாவிலிருந்து தமிழக அரசு இறக்குமதி செய்த 4 இலட்சம் வெகுவிரைவுக் கருவிகளை (Rapid Testing Kit) மத்திய அரசு இடைமறித்து தன்வசப்படுத்தியிருப்பது எதனாலும் சகிக்கமுடியாத தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.

பாஜக அரசு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக தமிழின விரோத நடவடிக்கைகளை, தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் பணிகளை திட்டமிட்டு செய்துவருகிறது. துயர் சூழ்ந்த இந்த பேரிடர் காலத்தில் கூட மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கி தனது தமிழின விரோத போக்கினை தொடர்ச்சியாக மத்திய அரசு வெளிக்காட்டி வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றினை உடனே பரிசோதனை செய்து முடிவுகளை அறிவிக்க வல்ல கருவிகளை மாநில அரசுகள் நேரடியாகக் கொள்முதல்செய்து பெற்றுகொள்வதற்குத் தடைவிதித்து, தமிழக அரசு கருவிகளை வாங்குவதற்கான பணிகளை முன்கூட்டியே செய்திருந்தாலும், அதில் இடைமறித்து அக்கருவிகளைப் பறித்துக்கொண்டு அதனை மற்ற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறுவது தமிழர்களின் நலனுக்கெதிரான மாபாதகச் செயலாகும்.

ஒட்டுமொத்த நாடே மிகப்பெரும் பேரிடரில் சிக்கி அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிற இவ்வேளையில் தங்களது மண்ணின் மக்களை தற்காத்துக்கொள்ள மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

அச்சூழலில் மனிதத்தைப் பாராமல், மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு உயிர்க்காக்கும் பொறுப்பை செய்யவிடாது இடையூறு செய்யும் மத்திய அரசின் செயல் கொடுங்கோன்மையானது. குறிப்பாக தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய அரசினை ஆளுகின்ற பாஜக முழுமூச்சாக செயல்பட்டு தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய நிதி உள்ளிட்ட அனைத்து நலன்களையும் முடக்கிப் போடுவது என்பது சகிக்க முடியாத சர்வாதிகாரத் தனம்.

கூட்டாட்சித் தத்துவத்தின்பால் வரையறுக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட இந்நாட்டில் பேரிடர் காலத்தில் அண்டை நாடுகளிலிருந்து உயிர்காக்கும் கருவிகளையும், சோதனைச் சாதனங்களையும் வாங்கக் கூட மத்திய அரசை சார்ந்தே இருக்க நிர்பந்திப்பது தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு தன் அடிமையாக கருதுவதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள