முதியவரை வெட்டி விட்டு, சங்கிலி, பணம் கொள்ளை!

You are currently viewing முதியவரை வெட்டி விட்டு, சங்கிலி, பணம் கொள்ளை!

யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில் வீதியால் சென்ற முதியவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள், கத்தியினால் வெட்டி விட்டு , அவரது ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலி மற்றும் 15,000 ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறீலங்கா காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து காணப்படுகிறது..

கடந்த வாரம் சங்கானை பிரதேச செயலக பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கடமை முடித்து வீடு திரும்பும் போது , மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பெண்ணின் சங்கிலி மற்றும் கைப்பை என்பவற்றை கொள்ளையடித்து சென்று இருந்தனர்.

அதேபோல வங்கியில் பணம் எடுத்து விட்டு வீடு நோக்கி சென்ற முதியவரை பகுதியில் வழிமறித்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிப்பறி கொள்ளையடித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் , வீட்டார் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியிடம் , தம்மை பொலிஸார் என அறிமுகம் செய்து கொண்டு , வீட்டினுள் புகுந்த மூன்று கொள்ளையர்கள் மூதாட்டியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

வல்வெட்டித்துறை- ஊரிக்காடு, நாவலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 2 மணியளவில், வாள் மற்றும் கோடாரியுடன் புகுந்த இருவர் வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான முதியவரின் அவல குரலை கேட்டு , அயலவர்கள் ஒன்று கூடிய வேளை தாக்குதலாளிகள் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய இருவரையும் அயலவர்கள் விரட்டிய போது , ஒருவர் அயலவர்களினால் மடக்கி பிடிக்கப்பட்டார். இருந்த போதிலும் மற்றையவர் தப்பியோடியுள்ளார். அயலவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டவர் வல்வெட்டித்துறை சிறீலங்கா காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தேவமயில் முருகவேள் (வயது 65) எனும் முதியவரே படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஊறணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply