கயேந்திரகுமார் எம். பி தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி ஒருதலைப் பட்சமாக இடம்பெறும் செயற்பாடுகள் காரணமாக குறித்த கூட்டத்திலிருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று(07.05.2026) கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு செல்லாமை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதாகக் கூறி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல்களில், சட்டத்தரணிகள் பேரவை நடுநிலை தவறிச் செயற்படுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் விருப்பங்களுக்கு ஏற்ப ஒருதலைப்பட்சமாகத் தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டங்களைப் புறக்கணித்துள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீறப்பட்டமை
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு முயற்சியைத் தொடர்ந்து, கொழும்பில் சட்டத்தரணிகள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே பங்கேற்பது என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், இத்தீர்மானத்திற்கு முரணாகப் பல விடயங்கள் அரங்கேறியுள்ளன:
• நிபுணர் குழு விவகாரம்: தமிழரசு கட்சியின் சார்பில் சுமந்திரன் முன்மொழிந்த நிபுணர் குழு உறுப்பினர்களை உள்வாங்க இணக்கம் தெரிவிக்கப்படாத நிலையிலும், அவர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
• சிவில் அமைப்புகள் புறக்கணிப்பு: தீர்மானத்தில் காத்திரமான பங்கினை வகிக்கும் தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமாரின் கோரிக்கையை சுமந்திரன் தரப்பு அடம் பிடித்து நிராகரித்துள்ளது.
• சமத்துவமின்மை: பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசிய பேரவையின் பங்காளி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
சுமந்திரனின் முரண்பாடான குறுக்கீடுகள்
தொழில்நுட்ப ரீதியாக (Zoom ஊடாக) கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சட்டத்தரணிகள் பேரவை அனுமதி வழங்கியிருந்த நிலையிலும், சுமந்திரன் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து முரண்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் பேரவை ஒரு சுயாதீன அமைப்பாகச் செயற்படாமல், சுமந்திரனின் நிபந்தனைகளுக்கும் எதேச்சதிகார முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதாகக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
திம்புக் கோட்பாடும் தற்போதைய நிலையும்
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு என்பது திம்புக் கோட்பாட்டின் அடிப்படையிலான சமஸ்டித் தீர்வாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கூட்டங்களில் பங்கேற்ற போதிலும், அங்கு எடுக்கப்படும் முடிவுகள் ஒருதலைப்பட்சமாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது என தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சுயாதீனமாக இயங்க வேண்டிய சட்டத்தரணிகள் பேரவை, ஒரு குறிப்பிட்ட தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளதால், அத்தகைய கூட்டங்களில் பங்கெடுப்பது அர்த்தமற்றது எனத் தெரிவித்துள்ள கஜேந்திரகுமார், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான பயணமே தமிழ் மக்களுக்குத் தேவையானது என வலியுறுத்தியுள்ளார்.






