சத்துருக்கொண்டான் படுகொலை நாள்!

You are currently viewing சத்துருக்கொண்டான் படுகொலை நாள்!

சத்துருக்கொண்டான் படுகொலை- ஒரே இரவில் 185 பொதுமக்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அவலம். 

ஒரு வயதுக்குட்பட்ட 5 கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர்- கண்கண்ட சாட்சி கிருஷ்ணகுமார். 


மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலை இலங்கையில் நடந்த கூட்டுப்படுகொலைகளில் மிக கொடூரமான சம்பவமாகும்.

சத்துருக்கொண்டான் போய்ஸ் ரவுண் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு 185 பொதுமக்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். 

சத்துருக்கொண்டான் போய்ஸ்ரவுண் இராணுவ முகாமில் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி கொக்குவில் ஆகிய கிராமங்களை சேர்ந்த 185பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு வயதிற்கு உட்பட 5 குழந்தைகள், பத்துவயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் 42பேர், கர்பிணி பெண்கள் 9பேர், 68வயதிற்கு மேற்பட்ட 28பேர் என 185பேர் ஒரே நாளில் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 

இதில் சத்துருக்கொண்டான் கிராமத்தை சேர்ந்த 38பேரும், பனிச்சையடியை சேர்ந்த 37பேரும் பிள்iயாரடியை சேர்ந்த 62பேரும் கொக்குவிலை சேர்ந்த 47பேரும் இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.

மனித உரிமை அமைப்புக்கள், மட்டக்களப்பு சமாதான குழு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் இச்சம்பவம் பற்றி நேரில் கண்ட கண்டவர்கள் சாட்சியமளித்திருந்தனர். 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த  ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவினால் வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையில் ஆணைக்குழு ஒன்றையும் நியமித்தார்.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 1995.04.24 தொடக்கம் 1995.05.02 திகதி வரை மட்டக்களப்பில் விசாரணகளை நடத்தியது.


இந்த ஆணைக்குழுவில் இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளாக கந்தசாமி கிருஷ்ணகுமார், ஆசிரியர் கந்தையா சிவக்கொழுந்து, மின்சாரசபை அத்தியட்சகராக பணியாற்றிய அந்தோனிப்பிள்ளை பிலிப் கிறிஸ்ரியன், ஆகியோரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவர் அருணகிரிநாதன் ஆகியோரும் சாட்சியமளித்தனர். பாதிக்கப்பட்ட 72 பொதுமக்கள் ஜனாதிபதி ஆணைககுழுவில் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

145 பக்கங்களை கொண்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 


ஜனாதிபதி பிரமதாஸவினால் உருவாக்கப்பட்ட கழுக்கொட்டி எனப்படும் கொலைப்படையி;னர் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களை மட்டக்களப்பு மக்கள் வெட்டுப்பாட்டி என அழைத்தனர். இவர்கள் கூட்டம் கூட்டமாக மக்களை கொண்டு சென்று வெட்டி கொலை செய்து வந்தனர். இந்த அச்சத்தினால் தங்கள் கிராமங்களை விட்டு அகதி முகாம்களிலும் தங்கியிருந்தனர். பலர் மாவட்டத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் செப்டம்பர் 5ஆம் திகதி 158பேர் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அகதி முகாமிலும் பாதுகாப்பு இல்லை என கருதி சத்துருக்கொண்டான் பிள்ளையாரடி மக்கள் தமது கிராமங்களுக்கு திரும்பியிருந்தனர்.

களுக்கொட்டி என அழைக்கப்படும் படைப்பிரிவு கப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரிய தலைமையில் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண் முகாமுக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி வந்திருந்தனர்.

அவர்கள் வந்த அன்றைய தினமே கொக்குவில் கிராமத்தில் 24பொதுமக்களை பிடித்து சித்திரவதை செய்து அவர்களில் மரியநேசம், சுப்பிரமணியன், தவராசா, குமாரசாமி ஆகிய நால்வரையும் உயிருடன் டயர் போட்டு எரித்தனர். ஏனைய 20பேரையும் முகாமுக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியாது.

சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் 8ஆம் திகதி சத்துருக்கொண்டான் தென்னம் தோட்டத்திற்குள் சென்ற படையினர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணபதிப்பிள்ளை, மற்றும் இளையான் ஆகிய இருவரையும் அடித்து சித்திரவதை செய்த பின் ஓலை மட்டையை போட்டு உயிருடன் எரித்துக் கொன்றனர்.

இச்சம்பவங்களால் சத்துருக்கொண்டான் மற்றும் பிள்ளையாரடி உட்பட அப்பகுதி கிராமங்களில் உள்ள மக்கள் பெரும் அச்சமும் பதட்டமும் அடைந்திருந்தனர். இதனால் பலர் அக்கிராமங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.  பல குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தனர்.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதி மாலை 5மணியளவில் கப்டன் வர்ணகுலசூரிய தலைமையில் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல் படையி;னரும், புளொட் மோகன் தலைமையில் புளொட் ஆயுதக்குழுவும் ஆயுதங்களுடன் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் ஆகிய கிராமங்களை சுற்றி வளைத்தனர்.

இராணுவ முகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது, அனைவரும் முகாமுக்கு வாருங்கள் என இராணுவத்தினர் உத்தரவிட்டனர். நடக்க முடியாத வயோதிபர்களை கூட அவர்கள் வீட்டில் இருக்க அனுமதிக்கவில்லை.


ஒரு சிலர் இராணுவத்தினரின் கண்களில் படாது காடுகளில் சென்று ஒழித்து கொண்டனர். அவர்களில் ஆசிரியர் சிவக்கொழுந்துவும் ஒருவர். அவர் பற்றைகாட்டிற்குள் ஒளித்திருந்து சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.

நான்கு கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்கள் 185பேரையும் கொண்டு சென்று இராணுவ முகாமுக்கு பக்கத்தில் இருந்த அரிசிஆலை கட்டிடத்திற்குள் அடைத்து வைத்தனர்.

பின்னர் வாள் கத்திகளுடன் வந்த இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் மூன்று மூன்று பேராக கொண்டு சென்றனர். இவர்களில் முதலில் 27வயதுடைய குமார், 33வயதுடைய ஜீவானந்தம், 22வயதுடைய கிருஷ்ணகுமார்  ஆகியோரை வெட்டி பாரிய கிடங்கு ஒன்றில் போட்டனர். இதில் கிருஷ்ணகுமார் என்பவரே காயங்களுடன் தப்பி இருந்தார்.

பின்னர் ஆண்களை மூன்று மூன்று பேராக அழைத்து வந்து இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றனர். கால்களையும், தலைகளையும் வெட்டி அங்கே ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டனர்.

இதன் பின்னர் பெண்களை வெளியில் கொண்டு வந்து பாலியல் பலாத்காரம் செய்து வெட்டிக்கொன்றனர்.


25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணிற்கு மூன்று மாதத்திற்கு முதல் தான் பெண்குழந்தை பிறந்திருந்தது. பிரியா என்ற மூன்று மாத குழந்தையை பறித்தெடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி தாயின் கண்முன் குழியில் வீசினர். ஜீவமலரை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் வெட்டி கொலை செய்தனர்.

பின் சிறுவர்களையும், குழந்தைகளையும் கொண்டு வந்து சாய்ந்து கிடந்த முந்திரிகை மரத்தில் ஒவ்வொருவராக படுக்க வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டி குழியிலே போட்டனர்.

சிறிது நேரத்தின் பின் இளம்பெண்களை இழுத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த நேரம் நன்றாக இருளாகி விட்டது. அந் நேரத்திலேயே சடலங்களுடன் உயிருடன் கிடந்த கிருஷ்ணகுமார் தவண்டு வெளியே வந்து முந்திரிகை மரத்து பற்றைக்குள் ஒளித்து கொண்டார்.

பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் இளம் பெண்களை வெட்டிக்கொலை செய்து குழியில் வீசினர். இவர்களில் பலர் அரைகுறை உயிருடன் காணப்பட்டனர்.

இவர்கள் மீது டயர்களை போட்டு பெற்றோல் ஊற்றி தீவைத்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னர் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்கு பின்பக்கத்தில் பெரும் தீச்சுவாலை தெரிந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த ஆசிரியர் சிவக்கொழுந்து தெரிவித்திருந்தார்.

காயங்களுடன் தப்பி வந்த கிருஷ்ணகுமாரை காடுகளில் ஒளித்திருந்த பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர். காயங்களுடன் ஒருவர் தப்பி சென்றுவிட்டார் என அறிந்த இராணுவத்தினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவரை தேடினர். ஆனால் கிருஷ்ணகுமாரை வைத்தியசாலையிலிருந்து மீட்ட பிரஜைகள் குழுவினர் மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகுமாருக்கு ஆயர் இல்லத்தில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் வாக்குமூலம் ஒன்றையும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுவினர் பதவி செய்து கொண்டனர். இந்த ஒலிப்பதிவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் நேரில் கண்ட சாட்சியான கந்தசாமி கிருஷ்ணகுமார் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். 
ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு சத்துக்கொண்டான் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட கப்டன் வர்ணகுலசூரியாவை அழைத்து விசாரித்தது. ஜனாதிபதி ஆணைக்குழு முன் அளித்த வாக்குமூலத்தில் சம்பவ தினம் யாரையும் இராணுவ முகாமுக்கு கொண்டுவரவும் இல்லை அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடக்கவும் இல்லை என கப்டன் வர்ணகுலசூரிய தெரிவித்திருந்தார். அக்கிராமங்களை சுற்றிவளைக்கவும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் படி கப்டன் வர்ணகுலசூரிய, கப்டன் ஹெரத் விஜயநாயக்க, கேணல் பெசி பெர்னாண்டோ ஆகியோரும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரும் புளொட் கொலைப்படையினருமே இக்கொலைகளை புரிந்தனர் என நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆணைக்குழு தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது.
ஆனால் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கவனத்தில் எடுக்கவில்லை. அந்த அறிக்கையை கிடப்பில் போட்டு விட்டார். 

ஒரு இனக்குழுமத்தை சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டால் அது இனப்படுகொலையாகும். சத்துருக்கொண்டான் உட்பட கிழக்கில் உள்ள தமிழ் கிராமங்களில் தமிழர் என்ற காரணத்திற்காகவே நூற்றுக்கணக்கானவர்கள் ஒரேநாளில் படுகொலை செய்யப்பட்டனர்.

போருடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என அனைவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

கிழக்கில் நடந்த மிகப்பெரிய படுகொலைகளில் சத்துருக்கொண்டான் படுகொலையும் ஒன்றாகும். இந்த படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட வலுவான சாட்சியங்களும் உண்டு. ஆனால் 30வருடங்கள் கடந்து விட்ட போதிலும் தமிழ் அரசியல் தலைமைகள் யாரும் இப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணையோ உள்நாட்டு விசாரணையோ நடத்தப்பட வேண்டும் என கோரவில்லை.

தமிழர்களுக்கு நீதியையும் உரிமையையும் பெற்றுத்தருகிறோம் என ஐ.நாவரை செல்லும் தமிழ் அர1சியல் தலைவர்களும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களும் சத்துருக்கொண்டான் உட்பட கிழக்கில் நடந்த படுகொலைகள் பற்றி எதுவுமே பேசியது கிடையாது.

( இக்கட்டுரை நீதியரசர் கே.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ( ( Panal Report of the Commission on Disappearances in the Northern & Eastern Provinces ) என்ற 145 பக்க அறிக்கை, பாதிக்கப்பட்ட மக்கள் மடக்களப்பு சமாதானக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை இச்சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய கிருஷ்ணகுமார் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி, சத்துருக்கொண்டான் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட அமெரிக்க பல்கலைக்கழக மாணவி பற்றிசியா லோறன்ஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதாகும். )

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments