சந்தேக நபர்களை தடுத்து வைத்து சித்திரவதை!

You are currently viewing சந்தேக நபர்களை தடுத்து வைத்து சித்திரவதை!

திருட்டுச் சம்பவத்தில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தாது இரு நாட்களாக சித்திரவதை செய்ததாக ஊர்காவற்துறை பொலிஸார் மீது யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் இரு சிறுவர்கள் உட்பட நயினாதீவைச் சேர்ந்த 7 பேரை கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். இது தொடர்பில் குறித்த ஏழு பேரின் உறவினர்கள் கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு இவ் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் மூலம் 7 பேரில் 4 பேர் கடந்த 14ஆம் திகதி ஊர்காவற்துறை பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரு சிறுவர்கள் உட்பட மூவர் கடந்த 16ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பிணை வழங்கியிருந்தார். பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த நபர் பொலிஸார் தாக்கியதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த 16ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இந் நிலையில் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சமர்பிக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

தாக்கப்பட்டு வைத்தியசாலையில் உள்ள நபரின் உறவினர்களிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று(18) விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

பகிர்ந்துகொள்ள