அதிகாரப் பகிர்வின் ஊடாக சமஷ்டியைப் பெற்றுவிடலாம் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயல்கின்றார்கள். ஆனால் சமஷ்டி என்ற பேச்சுக்கு இங்கு ஒருபோதும் இடமில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தான் தீர்வல்ல. நாட்டைப் பிளவுபடுத்தும் தீர்வு இங்கு தேவையில்லை. ஒற்றையாட்சி ஊடாகத்தான் தீர்வைக் காண முடியும். நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர்தான் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் தொடரும். ஏனெனில் புதிய நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் அரசமைப்பு சீர்திருத்தப் பணிகளை நாம் முன்னெடுக்க முடியும். அதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு தொடர்பில் எந்த வாக்குறுதிகளையும் நாம் வழங்கவில்லை.
சர்வதேசம் சமஷ்டி என்ற பிச்சையைத் தரும் என சம்பந்தன் கனவு காணக்கூடாது. புதிய நாடாளுமன்றத்தில் அரசியல் தீர்வுக்கான பணிகளை நாம் முன்னெடுத்தாலும் பெரும்பான்மை இன மக்களின் அனுமதியுடன்தான் சிறுபான்மை இன மக்களுக்கான தீர்வை வழங்க முடியும்.
பெரும்பான்மை மக்கள் விரும்பாத தீர்வை சிறுபான்மை இன மக்களுக்கு வழங்க முடியாது. சமஷ்டியை ஒருபோதும் பெரும்பான்மை இன மக்கள் விரும்பவில்லை. அப்படியான தீர்வு இங்கு எதற்கு? ஜனாதிபதி கூறியது போன்று இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.