இலங்கை அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டு வருவதனை தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டு வருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுத்தி இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 13ஆம் திருத்தமானது, நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து அது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை நிராகரித்து வந்துள்ளனர்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைபு சமர்ப்க்கப்பட்டிருந்த பொழுது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த தரப்புக்கள், அந்த வரைபை இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றுகோரி இந்திய பிரதமருக்கு எழுத்து மூலமாக தெரிவித்திருந்ததும் வரலாற்று நிகழ்வாகும்.
13ஆம் திருத்தமானது சட்ட மூலமாக நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்துமாறு கோரப்பட்டதனுடைய நோக்கமே, 13 ஆம் திருத்தமானது, தமிழ் மக்களின் தீர்வு என்னும் விடயத்தில் ஆரம்பப் புள்ளியாகக் கூட கருதப்பட முடியாது என்பதனாலேயாகும்.
எனினும் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், குறித்த 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாணசபைகள் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பு மட்டும் 1988இல் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வடகிழக்கு மாகாண சபையிலிருந்த நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்தது.
இருந்த போதிலும் இதனூடாக எதனையுமே சாதிக்க முடியாது என்ற உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்த போது, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்த அந்தத் தரப்புக்கூட, தாம் வகித்துவந்த மாகாண சபை அங்கத்துவத்தினை இராஜினாமா செய்து 13 ஆம் திருத்தத்தினை முற்று முழுதாக நிராகரித்திருந்தனர்.
இந்த நடவடிக்கையானது, தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில், 13 ஐ முன்னிறுத்தி நகர முடியாது என்பதை நிரூபிப்பதாகவும், 13 ஆம் திருத்தமானது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஆரம்பப்புள்ளியாக கூட கருதமுடியாது என்ற யாதார்த்தத்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
34 வருடங்களுக்கு மேலாக இந்த 13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும், இலங்கை அரசியலமைப்பில் இருந்தும் கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிராகரித்தே தமது ஏகோபித்த ஆணையை வழங்கி வருகின்றனர்.
தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – தமிழ்த் தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய – இணைந்த வடக்கு கிழக்கு தாயகம் பாதுகாக்கப்படுகின்ற சமஸ்டித் தீர்வையே கோரி வருகின்றார்கள்.
13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும் கடந்த 34 வருடங்களாக நடைமுறையில் இருக்கக் கூடியதாகவே, தமிழ் மக்களின் ஆணைகளைப் பெற்றவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் 13 ஆம் திருத்தம் ஒரு பேச்சுப் பொருளாகக் கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.