உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் (Skull-Breaker Challenge) என்ற விளையாட்டு சமூக வலைத்தளங்களில் மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு, ஐஸ் சேலஞ்ச் , மோமோ சேலஞ்ச், ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்,டென் இயர்ஸ் போட்டோ சேலஞ்ச், வீடியோ கால் சேலஞ்ச், தானிய சேலஞ்ச் போன்றவைகள் பிரபல்யம் ஆகின.
பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப் படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த வகையில், தற்போது ‘ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்’ என்ற பெயரில் சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதன்படி, மூன்று பேர் வரிசையாக நிற்க வேண்டும். ஓரத்தில் உள்ள இருவரும் முதலில் எகிறி குதிப்பர். பின்னர் நடுவில் உள்ளவர் குதிப்பார். நடுவில் உள்ளவர் குதிக்கும்போது ஓரத்தில் நிற்பவர் இருவரும் சேர்ந்து காலால் அவரை தடுத்து கீழே விழ வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நடுவில் நிற்பவர் பின்னோக்கி விழுகிறார்.
இந்த விளையாட்டில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சவாலில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் என்றும் மாணவர்கள் இதனை கைவிட வேண்டும் என்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உயிரைப் பறிக்கக் கூடிய இந்த விளையாட்டை செய்து மாணவர்கள், மாணவிகள், இளம்வயதினர் என அனைவரும் டிக்டாக்கில் இதனை பதிவிட்டு வருகின்றனர்.