உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நாளை வாய்ப்பு தருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், தற்போது கிழக்கு உக்ரைனிய பகுதியான செவரோடோனெட்ஸ்க்கை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமடைந்துள்ள நிலையில், செவரோடோனெட்ஸ்க் நகரை பிற உக்ரைனிய நகரங்களுடன் தரைவழியில் இணைக்கும் மூன்று பாலங்களையும் ரஷ்ய படைகள் தகர்த்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் வெளியேற வழியின்றி சிக்கி இருக்கும் நிலையில், நகரின் தொழிற்சாலை பகுதியில் உள்ள (Azot)அசோட் இரசாயன ஆலையில் 500 மேற்பட்ட பொதுமக்கள் பதுங்கியுள்ளனர். இந்தநிலையில், அசோட் இரசாயன ஆலையில் பதுங்கி இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற நாளை வாய்ப்பு வழங்குவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், செவரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான மனிதாபிமான வழிகளை (humanitarian corridor) ரஷ்யா நாளை காலை 5 மணிக்கு திறக்கும் என தெரிவித்துள்ளது.
அதேசமயம் உக்ரைனிய வீரர்களும் முட்டாள் தனமான எதிர்ப்புகளை தவிர்த்து, தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ரஷ்ய படைகளிடம் சரணடையுமாறு தெரிவித்துள்ளது. அத்துடன் உக்ரைனிய வீரர்கள் பொதுமக்களை தடுப்புகளாக பயன்படுத்துவதாகவும் ரஷ்யா இந்த தகவலில் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இதுத் தொடர்பாக உக்ரைனிய தலைநகர் கீவ்விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், சரணடைய உத்தரவிடுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலோபாய அடிப்படையில் செவரோடோனெட்ஸ்க் மிக முக்கிய நகராக பார்க்கப்படுகிறது, என்னென்றால், செவரோடோனெட்ஸ்க் நகரம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டால் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள நகரங்களில் லிசிசான்ஸ்க் மட்டுமே இன்னும் உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.