தமிழ் மக்கள் தமது முடிவை அறிவிக்கக் கூடிய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தமிழக மக்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
13 ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களை முடக்குகின்ற தரப்புக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 30 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு ஆதரவு கோரி யாழ்ப்பாணம் – நெல்லியடியில்பரப்புரையில் ஈடுபட்ட போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு இலங்கை அரசு சீனா என்கின்ற விடயத்தைப் பயன்படுத்தி இந்தியாவைக் கொண்டு இந்த ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற இந்த வேலையைச் செய்விக்கின்றது.
இந்த இடத்திலே நாங்கள் தமிழ்நாட்டு உறவுகளை உரிமையுடன் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.
இன்றைக்கு மிக மோசமான ஒரு கோரிக்கை இலங்கை கேட்பதற்காக தன்னுடைய வல்லரசு நலன்களுக்காக மட்டும் ஒரு இனத்தினுடைய எதிர்காலத்தை அழிக்கின்ற வகையிலே செயற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகத்தால் மட்டும்தான் அதனைச் செய்யலாம். அந்த வகையிலே வந்து இந்திய மத்திய அரசுக்கு எதிர்ப்ப தெரிவிக்கின்ற வகையிலே தமிழகத்திலே இருக்கக்கூடிய மற்றும் உலகத்திலே இருக்கின்ற மனித நேயத்தை நேசிக்கின்ற அனைத்து இந்தியப் பிரஜைகளுக்கும் வந்து இந்த 13 ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லிக் கேட்கின்ற இந்த கோட்பாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற, தமிழருடைய தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற தமிழருடைய இறைமை அங்கீகரிக்கப்படுகின்ற, சுய நிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய ஒரு சமஷ்டி தீர்வை கோருவதற்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அது சம்பந்தமாக இறுதியிலே தமிழ் மக்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக அவர்களுடைய முடிவை அவர்களே அறிவிக்கக் கூடிய வகையிலே இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.