சர்வதேச சட்டத்தின்கீழ் வலுவான புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்!

You are currently viewing சர்வதேச சட்டத்தின்கீழ் வலுவான புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், மிகமோசமடைந்து வரும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போது கொண்டிருக்கும் ஆணையை மேலும் உறுதிப்படுத்தக் கூடியவாறான மிகவும் வலுவான புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டுமென சர்வதேச மட்டத்தில் இயங்கும் 4 மனித உரிமைகள் அமைப்புக்கள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

அதுமாத்திரமன்றி பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை முடிவிற்குக்கொண்டுவரல் உள்ளடங்கலாக நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அப்புதிய தீர்மானத்தின் ஊடாக வலியுறுத்தப்படவேண்டும் எனவும் அவ்வமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் அன்றைய தினமே இலங்கை தொடர்பான விவாதமும் இடம்பெற்றது.

அதனை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை, ஆசியப்பேரவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு ஆகிய 4 அமைப்புக்கள் ஒன்றிணைந்து மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளுக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளன. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல வருடகாலமாக நீதியைக்கோரிப் போராடிவருகின்ற போதிலும், அந்நாட்டு அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகளை மீறியும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் தடைகளை ஏற்படுத்தியும் போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு உயர்பதவிகளை வழங்கியும் வந்திருக்கின்றது. எனவே பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன நிலைநாட்டப்படுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கக்கூடியவாறான தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெறும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதற்கும், இலங்கை மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும் சர்வதேச மட்டத்திலான உடனடி நடவடிக்கைகள் அவசியமாகின்ற பல்வேறு விடயங்கள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சுமார் ஒரு தசாப்தகாலத் தொடர்பானது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கையைத் தோற்றுவிப்பதற்கு ஏதுவானதோர் காரணியாக இருந்திருக்கின்ற பின்னணியில், பேரவையானது இவ்விவகாரத்தில் நிலையான கவனத்தைக் குவிக்கவேண்டியது அவசியமாகும்.

அதன்படி எவ்வித அச்சமுமின்றி கருத்துக்களை வெளியிடுவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு மதிப்பளித்தல், போராட்டத்தில் கலந்துகொண்டதாக அல்லது போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக நம்பப்படும் நபர்களைக் கைதுசெய்தல், தன்னிச்சையாகத் தடுத்துவைத்தல் மற்றும் அவர்களின்மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்தல் ஆகியவற்றை முடிவிற்குக் கொண்டுவரல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதுவரை அச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துதல், நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய புதிய தீர்மானத்தில் வலியுறுத்தப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply