சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் சில நாட்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
ஐ.எம்.எப்புடன் தற்போது பணியாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட இந்த ஆண்டு இறுதிக் காலப்பகுதியிலேயே ஐ.எம்.எப்பின் கடன் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் மட்டத்திலான குழுவினரின் பிரதான நோக்கம் இலங்கையின் பொருளாதார திட்டங்கள் எவ்வாறானது என்பதையும், அரச செலவீனங்களை குறைப்பதும், வருவாயை அதிகரிக்க இலங்கை அரசாங்கத்திடம் உள்ள வேலைத்திட்டங்கள் என்ன என்பது குறித்து ஆராயும் விதமாக அமையும் என கூறப்பட்டுள்ள நிலையில், ஐ.எம்.எப்பின் கடன் திட்டம் இந்த ஆண்டு இறுதியிலேயே கிடைக்கும் எனவும், அவர்கள் இலங்கைக்கு வந்து உடன்படிக்கை செய்துகொண்டாலும் கூட கடன்களை வழங்க வாய்ப்புகள் இல்லை எனவும் அரச மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் கடன்களை பெற்றுக்கொள்ள முன்னர் இலங்கை அரசாங்கம் நிருவாக மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிவரும். அது இலகுவானது அல்ல எனவும் பிரதமர் அரசு உயர் மட்ட உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது.