ஏர் மொரிஷியஸ் விமானத்தின் கழிவறையில் இருந்த குப்பைத்தொட்டியில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஜனவரி 1-ஆம் திகதி, மடகாஸ்கரில் இருந்து வந்த ஏர் மொரிஷியஸ் விமானம் சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சுங்க சோதனைக்காக விமானத்தை சோதனை செய்தபோது, புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று விமானத்தின் கழிவறை குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்டதை கண்டுபிடித்தனர்.
அவர்கள் உடனடியாக அந்த குழந்தையை சிகிச்சைக்காக பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த விமானத்தில் குழந்தை பிரசவித்ததாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கரை சேர்ந்த 20 வயது பெண் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அப்பெண், குழந்தை தன்னுடையது அல்ல என்று முதலில் மறுத்ததால், அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர் குழந்தையை பெற்றெடுத்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், அவர் மருத்துவமனையில் பொலிஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
அப்பெண்ணும் குழந்தையும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு வருட வேலை அனுமதியில் மொரிஷியஸுக்கு வந்த அந்த மலகாஸி பெண், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு விசாரிக்கப்படுவார் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையை கைவிட்டதற்காக குற்றம் சாட்டப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.