சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

You are currently viewing சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தியானது தமிழர் தலைநகரிலேயே தாக்கப்பட்ட இந்தச் சம்பவமானது வடகிழக்கு மாகாணங்களில் இன்னமும் தமிழ் மக்களுக்கு அவர்களது குறைந்த பட்ட நினைவுகூறும் உரிமை கூட மறுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு சாட்சியமாகும்.

அகிம்சையைப் பற்றிப் போதித்து அகிம்சாவாதிகளிற்கும் சனநாயகவாதிகளிற்கும் முன்னுதாரணமாக விளங்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் இந்த நினைவேந்தலை தாக்கும் சிங்கள அடிப்படைவாதக் கும்பல்களைப் பார்த்தாவது உலகச் சமூகமும் நம் மக்களும் நமது இந்த நிலை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

*அழகராசா விஜயகுமார்*
*தலைவர்,*
*யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.*


தியாகி திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதல், இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது. !!!!

தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை கப்பற்துறையருகே சிங்களக் காடையர்கள் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் கனன்றெரிகிறது என்பதை இன்னுமொருமுறை நிரூபணம் செய்திருக்கிறது.

இருநாட்டு அரசுகளின் கவனத்தையும், ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை நியாயத்தையும் கோரி 36 ஆண்டுகளின் முன்னர் அகிம்சைப் போராட்டம் நடாத்திய, திலீபன் என்கிற தியாகியின் உருவப்படத்துக்கும், அதைத்தாங்கிய ஊர்திக்கும், அவ்வூர்தியோடு இணைந்து பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கும் இந்த நிலை என்றால், எந்தவித நியாயப்பாடுகளுமற்று இத்தனை ஆவேசமாய் இனவாதத்தைக் கக்கும் சிங்களவர்களோடு, இந்த நாட்டில் தமிழர்கள் இணைந்து வாழ்வது எத்தனை தூரம் சாத்தியமானது என்பது பற்றி, இனிமேலேனும் சர்வதேச சமூகம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

ஜெனீவா அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமநேரத்தில், தமிழர்களையும், அவர்களது போரியல் நியாயத்தையும், இனத்துக்காக நிகழ்த்தப்பட்ட தியாகத்தையும் காலில் போட்டு மிதித்து, தங்களது அடக்குமுறை மனோபாவத்தை சிங்கக்கொடிகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ள சிங்களக் காடையர்களது செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழர்களது உணர்வுநிலைகள் குறித்தும், அவர்களது சுயாதீன உரித்துகள் குறித்தும் எப்போதும் கள்ளமெளனம் காக்கும் ஆட்சி அதிகாரபீடங்கள், இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நாம் துளியும் எதிர்பார்க்கவில்லை.

இருந்தபோதும், ஒரு சுதேசிய இனத்தின் அடிப்படை உணர்வுநிலைகளை வலிந்து சீண்டி,  இரு இனங்களுக்குமிடையிலான முரண்நிலைகளை மீண்டும் மீண்டும்  கொதிநிலைக்குத் தள்ளி அரசியல் லாபம் ஈட்டும் சக்திகள் இனங்காணப்பட வேண்டும். ஈழத்தமிழர்களது தன்னாட்சிக் கோரிக்கை நியாயபூர்வமானது என்ற செய்தியை சர்வதேச சமூகத்தின் செவிகளில் அறைகூவல் செய்வதற்கு இந்தச் சம்பவம் ஓர் சாட்சியமாய் அமைந்திருக்கிறது. இதன் விளைவென்பது, எமது மக்களிடத்தே இனம் குறித்த ஓர்மத்தை தணியாது தகிக்கச் செய்துகொண்டே இருக்கும் என்பதை சிங்களவர்களும் உணரும் காலமொன்று உருவாகியே தீரும்.

சிவஞானம் சிறீதரன்.
நாடாளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.


தியாக தீபன் திலீபன் வாகனம் தாக்குல்:

இனவெறி அடங்காத சிங்கள அரசு தொடந்து தாக்கப்படும் தமிழர்கள் பன்னாட்டுச் சமூகம் இனியாவது விழித்துக் கொள்ளட்டும்.

———————————————-
தமிழர் நலப் பேரியக்கத்தலைவர் சோழன் மு. களஞ்சியம் கண்ட அறிக்கை
———————————————-

தியாக தீபன் திலீபனின் ஊர்தி பவனி வாகனத்தின் மீது சிங்கள இனவெறிக் கும்பல் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தது.

பன்னாட்டு அளவில் ஐ.நா. முன்பு பெரும் கவனம் ஈர்ப்பு மாநாடு நடந்தேறுகிற இந்த நேரத்தில் இது போன்ற கொடுந்தாக்குதல்களை இலங்கை சிங்கள இனவெறிக்கும்பல் நடத்துவது கவனம் கொள்ள த்தக்கது. இன்னும் தாயகத்தின் நிலை என்னவென்பதை தெரியும் படுத்தும் நிலை இது.

30 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் சிங்களர்களின் இனவெறியைக் கண்டித்து 12 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த திலீபனின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக இந்த ஊர்தி பவனி நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால் இந்தத்தாக்குதல் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இன்னும் சிங்களர்களின் இனவெறி அடங்கவில்லை என்பதே!

இந்நிலையில் திருகோணமலை கப்பல்துறை பகுதியில் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை இன்று ஊர்தி பவனி வந்துள்ளது, அங்கு இலங்கையின் தேசிய கொடியுடன் வந்த சிங்களக் காடையர்கள் ஊர்தி பவனி மீது தாக்குதல் மேற்கொண்டு , தியாக தீபத்தின் உருவ படத்தினையும் அதில் கலந்து கொண்ட தமிழர்களையும் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சிங்கள இராணுவம், காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. அதன் காணொளி காட்சியை கண்ட போது நெஞ்சம் பதைக்கிறது.

சர்தாபுர பகுதியில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் கற்களை நடுவீதியில் போட்டு, வீதியை வழிமறித்துள்ளனர். அந்த பகுதியில் காவலர்கல், இராணுவ புலனாய்வுத்துறையினரும் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். யாரும் இத்தாக்குதலை தடுக்கவில்லை.

முகத்தை கருப்புத்துணியால் கட்டிய சிங்கள இளைஞரொருவன் பெரிய கல்லினால் வாகனத்தை தாக்கும் காட்சி நம்மை நடுங்க வைக்கிறது.

தொடர்ந்து வாகனம் முன்னேறிய நிலையில், வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி காத்திருந்த, ஆண்களும், பெண்களும் நிறைந்திருந்த கூட்டம், வாகனத்தை சுற்றிவளைத்து, தடிகளால் அடித்து தாக்குவது வேதனைக்குரியது..

சிங்கள மக்களுக்குள் இருக்கும் இனவெறி என்றுமே மாறாது என்பதை இந்நிகழ்வு மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பித்து, ஊர்தியை திருப்பி அருகிலுள்ள தம்பலகாமம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில், அங்கேயே தங்கியுள்ளனர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.அவர்கள் உயிர்பிழைத்ததே பெருஞ்செயல்..

இலங்கை பெளத்த சிங்கள பேரினவாத அரசு பின்புலத்தில் இருந்து கொண்டு இந்த கொடுந்தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன அங்கே எப்படி இருக்கும் என்பதை சர்வதேச சமூகம் இதன் வழியாகவாவது புரிந்து கொள்ளட்டும்..

சிங்கள மக்களோடு, தமிழ்மக்கள் எந்த காலத்திலும் இணைந்து வாழவே முடியாது என்பதே இந்த கொடுஞ்செயல்கள் நமக்கு காட்டும் படிப்பினை!

இந்தத் தாக்குதல்களை ஐ.நா. கவனம் ஈர்ப்பு மாநாட்டுக் குழுவினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்
சோழன் மு. களஞ்சியம்


விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்:
விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்!
நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற சூழலில் இலங்கை!
……………..,……………..
காவல்துறை பாதுகாப்பில் இருக்க சிங்கள இனவெறியர்கள் தாக்குதலை நடத்துகிறார்கள்.
அதுவும் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் மீதே இந்த கொடூரத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற நாடாக இலங்கை தொடருகிறது.
இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர்கள் எப்படி காவல்துறை இருக்கும் போதே சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்களோ அப்படி கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது சிங்கள இனவெறிக்கும்பல்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டின் நினைவையொட்டி,
திருகோணமலையிலிருந்து
செப்டம்பர் 15 முதல் எழுச்சி ஊர்தி பயணத்துக்கு பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அணிதிரண்டனர்.
நேற்று முன்தினம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்திப் பயணம் நேற்று மட்டக்களப்பு வாகரையில் நிறைவடைந்தது.

மூன்றாவது நாளான இன்று திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் ஆரம்பித்த ஊர்திப் பவனி அங்கிருந்து ஆலங்கேணி தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நகருக்குள் பிரவேசித்தது.
மக்களை எழுச்சியுடன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த கூடினர்.
50 க்கும் மேற்பட்ட இராணுவ புலனாய்வாளர்கள் வந்து பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
கப்பல்துறை முக சந்திக்கருகில் ஊர்தி வாகனம் சென்று கொண்டிருந்த போது,
திடீரென கல்வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சர்தாபுர சந்தியில் வாகனங்கள் மீதும் தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இவையெல்லாம் சிங்கள காவல்துறை இருக்கும் போதே நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
கல்லெறிந்த அந்த இனவெறிக்கும்பல் நேரடியாக ஊர்தி அருகே வந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்களை சூழ்ந்து கொண்டு கொலை வெறியோடு தாக்கினர்.ஆனால்,சிங்கள இனவெறியர்களின் தாக்குதலை போலீசார் வேடிக்கை பார்த்தனரே தவிர,
தடுக்கக்கூட முயலவில்லை.பின்னர் பொதுமக்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகளும் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்குதலிலிருந்து பாதுகாத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய அமைதிப்படையை கண்டித்தும்
5அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தியும் 1987 செப்டம்பர் 15 ஆம் தேதி கேணல் திலீபன் உண்ணாநிலைப்போராட்டத்தை துவங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவை போற்றும் வகையில் இம்மாதிரியான ஊர்தி பயணத்தை ஒருங்கிணைப்பது வழக்கம்.
முறையான முன் அனுமதியோடு தான் நடத்தப்படுகிறது.
ஆனாலும், சிங்கள இனவெறியர்கள் இத்தாக்குதலை தொடுத்திருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
இப்படி தாக்குதலை நடத்தி தமிழீழ உறவுகளை அச்சுறுத்த முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினர் மீதான இத்தாக்குதலை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இன்னமும் தொடரும் இனவெறிப்போக்குக்கு எந்த தீர்வும் காணாமல்,
சிங்கள இனவெறி அரசுக்கு ஒத்துழைக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கும் சிங்கள பவுத்த இனவாதிகளுக்கு துணைபோவதாகவே அமைந்துள்ளது.
தொடரும் இத்தகைய இனவெறித்தாக்குதலை தடுத்து நிறுத்தும் பொறுப்பு சர்வதேசத்துக்கும் உண்டு.
ஆகவே,இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தீர்வு காண இந்தியாவும் தலையிட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
-வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
17.9.2023


*தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம்.*

*வ.கௌதமன்*

“தியாக தீபம்” அண்ணன் திலீபனின் 36 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடத்திய நினைவு ஊர்தி பயணத்தில் திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களின் மீதும் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள காடையர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் நாள் பொத்துவில் தொடங்கிய பயணம் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் நிறைவடைந்து மூன்றாம் நாளான இன்று திரிகோணமலையில்பயணித்துக் கொண்டிருந்த பொழுது 50க்கும் மேற்பட்ட ராணுவ புலனாய்வாளர்களைக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போதிலும் கப்பல்துறை முக சந்திக்கு அருகில் வந்து கொண்டிருந்த நிலையில் முதலாவதாக கல்வீச்சும் அதனை தொடர்ந்து சந்தாபுர சந்தியில் “தியாக தீபம்” திலீபனின் ஊர்தியை தாக்கியும் அதனை தடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களையும் சட்டத்தரணி நா.காண்டீபன் அவர்களையும் சிங்களக் கொடி பொருத்திய தடிகளால் கொலை வெறி தாக்குதல் நடத்திய காணொளிகளை கண்ட பொழுது நெஞ்சம் துடிதுடித்து மனம் தாங்க முடியாத துயரத்தை அடைந்தது. புலனாய்வாளர்களும் சிங்கள காவலர்களும் சுற்றி சூழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காடையர்கள் நடத்தி இருப்பதென்பது ராஜபக்சே என்கிற கொடூரமானவருக்கு எந்த விதத்திலும் தான் சளைத்தவர் அல்ல என உலகத் தமிழினத்திற்கு ரணில் விக்கிரமசிங்கே அவர்கள் மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லி சவால் விட்டிருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திட்டமிட்ட இன அழிப்பு நடந்து 14 ஆண்டுகள் கடந்த பின்பும் இவ்வுலகம் எங்களுக்கு நீதி தராத நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இலங்கை தேசத்தில் இத்தகைய ஒரு நிலை என்கிறபோது எங்களது சாமானிய தமிழர்கள் அங்கு எப்படி வாழ முடியும் என்பதை இனியாவது ஐநா போன்ற உலகின் பெருமன்றங்கள் சிந்தித்து இதற்கெல்லாம் ஒரே தீர்வு “தனித் தமிழீழம்” ஒன்றுதான் என்று முடிவெடுக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து எங்கள் மீது அதிகார அத்துமீறலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிங்கள காடையர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிற செய்தி ஒன்றே ஒன்றுதான்.

“ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு”

வெல்வோம்.

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்.

*வ. கௌதமன்*
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
17. 09. 2023


*தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம்.*
-சீமான்-
சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு வலுக்கும் கண்டனங்கள்! 1
சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு வலுக்கும் கண்டனங்கள்! 2
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments