சொந்த தேசத்தினை சூறையாடி தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய , 74 வருடங்களுக்கு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
இந்த உண்மையினை சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியை உலுக்கிய மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நினைவேந்தலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி இறால் வளர்ப்பு பண்ணையில் இடம்பெற்ற படுகொலையும், 1992 ஆம் ஆண்டு ஜூன் 12ம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 180 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை நினைவுகூறும் வகையில் வருடாந்தம் இந்த நினைவு தினம் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் பங்களிப்புடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட தமிழ் தேசிய ஆதரவாளர்கள், படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரை நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ் தேசத்திற்குரிய நீதிக்கான போராட்டத்தினை தீவிரப்படுத்தியுள்ள இந்த சூழலில் தமிழினப்படுகொலை நடைபெற்ற இந்த வாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டின் வங்குரோத்து தன்மையினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிங்களத்தலைமைகள், தங்களது இனத்துக்கு மட்டும் தான் இந்த நாடு என நினைத்து தமிழினத்தை அடக்கியொடுக்கி அழிப்பதற்கு எடுத்த முயற்சியின் ஒட்டுமொத்த சுமை தான் ஒட்டு மொத்த பொருளாதாரத்தினையும் அழித்து வங்குரோத்து நிலைமைக்கு தள்ளியுள்ளது.
இன்றாவது சாதாரண சிங்கள அப்பாவி மக்கள் தங்களது தலைவர்கள் செய்த அநியாயங்களை இனவாத அடிப்படையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அநியாயங்களை இன அழிப்பினை சரியான வாகையில் புரிந்து கொண்டுள்ளனர்.
இனவாதத்தினை காட்டி தனது சொந்த தேசத்தின் சொத்துகளை சூறையாடி தங்களது நலனைமட்டும் பேணிய தலைமைத்துவங்கள் 74 ஆண்டுக்கு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த உண்மையினை சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தின் இருப்பினை அங்கீகரித்து, தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சேர்ந்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டு ஒரு முற்போக்கு பாதைக்கு இட்டுச்செல்வதற்கு சிங்கள தேசம் முன்வர வேண்டும்.
அவ்வாறான ஒரு அடிப்படையான மாற்றம் வரும்போது தான் இந்த இலங்கை தீவு முழுமை அடையக்கூடியதாகயிருக்கும். இலங்கை அரசு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் உழைப்பு இலங்கை அரசின் உழைப்பினைவிட அதிகமாகவுள்ள நிலையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த தமிழ்தேசத்தின் இருப்பினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இலங்கையின் அமைவினை மாற்றியமைப்பதன் ஊடாக சிங்கள தேசமும் தமிழ் தேசமும் இணைந்து இந்த நாட்டினை ஆக்கபூர்வமான வகையில் கட்டியெழுப்புவதற்கு தமிழினம் தயாராகயிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.