சிங்கள வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே கஜேந்திரகுமார் கைது!

You are currently viewing சிங்கள வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே கஜேந்திரகுமார் கைது!

தென்னிலங்கை சிங்களவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கம் விவகாரத்தில் அலி சப்ரி ரஹீம் கைதுக்கும்,கஜேந்திரகுமார் கைதுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே செவ்வாய்க்கிழமை (6) ஆவேசமாக உரையாற்றினார்.டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பான வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு பிற்போடப்பட்ட நிலையில் அவர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்றத்தில் இருந்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் குடியுரிமை விவகாரத்தில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனது.

ஆகவே குடியுரிமை விவகாரத்தில் டயனாவுக்கு ஒரு நீதி,கீதாவுக்கு ஒரு நீதி என்று கேள்வி எழுப்பினேன்.மறுபுறம் நீதிமன்றத்தை நான் அவமதிக்கவில்லை. நீதிமன்றத்தை பலவீனப்படுத்த வேண்டாம்.அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றே குறிப்பிட்டேன்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் அனுமதி கோரிய போது ‘டயனா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் குற்றமிழைத்துள்ளார்.

அவரை கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதி அவசியமில்லை,குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் அவரை கைது செய்யலாம் என நீதிபதி பிரசன்ன அல்விஸ் குறிப்பிட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கைது செய்யாமல் இருப்பது பிரச்சினைக்குரியது.

மறுபுறம் தண்டனை சட்டக்கோவையின் 32 ஆவது பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியுள்ளமை தெளிவாக புலப்படுகிறது.ஆகவே இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பிரச்சினைக்குரியதே என்பதையே குறிப்பிட்டேன்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது,அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது ஆகியவற்றுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது.

அரசாங்க தரப்பு உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு தங்கம் கொண்டு வந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.700 மில்லியன் ரூபா நட்டஈடு விதிக்க வேண்டிய நிலையில் அவர் 7.4 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்தி கைதான மறுதினமே பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.எதிர் தரப்புக்கு ஒரு சட்டம்,அரசாங்க தரப்புக்கு பிறிதொரு சட்டம் இது தவறானதொரு செயற்பாடாகும்.

தென்னிலங்கை சிங்களவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.தெற்கை உற்சாகப்படுத்துவதற்கு வடக்கில் ஒன்றை செய்வதும்,வடக்கை உற்சாகப்படுத்த தெற்கில் ஒன்று செய்வதும் அரசாங்கத்துக்கு பழக்கமாகி விட்டது என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments