உலகத்தமிழரை
ஒன்றிணைக்கும்
ஒற்றைச்சொல்
மாவீரர்!
அழகுத்தமிழை
அரியணையிலேற்றி
உயரிய வாழ்வினை
உவந்தளித்தவர்
மாவீரர்!
சருகாய் காய்ந்து
மெலிந்து
காலில் மிதிபட்டு
வீழ்ந்த தமிழை
விதையாய் வீழ்ந்து
துளிர்த்து
நிமிர்த்திக்காட்டியவர்
மாவீரர்!
நெருப்பு மழையுக்குள்
எதிரியின் செருக்குடைத்து
உரிமைப்போரின்
உயிர்விளக்காய்
எரிபவர்கள்
மாவீரர்!
சாவின் நேரம் தெரிந்தும்
சற்றும் தளராது
சாதித்துக்காட்டி
விடுதலையின்
சாரதிகளாய்
சத்திய இலட்சியப்
பாதையில்
சந்ததிகளின்
நித்திய வாழ்வின்
நிம்மதிக்காய்
கூட்டிச்செல்பவர்கள்
மாவீரர்!
இத்தனையும்
இதயத்தின் ஆழத்தில்
பசுமரத்தாணியாய்
பதிந்து இருப்பதால்த்தான்
எங்கள்
மாவீரக்கோவில்களை
எதிரியானவன்
கிலிகொண்டு
தகர்த்தான்!
அவர்கள்
கல்லறைகளை
சிதைத்தான்!
ஆனால்?
எங்கள்
நெஞ்சறையை
அவனால் சிதைக்க
முடியவில்லை!
மாறாக
வஞ்சம் கொண்ட
மாந்தரின்
வறட்டுக்கௌரவத்தில்
புலத்திலும்
எங்கள் மாவீரர்
கோவில்களை
சிதைக்க முயல்வதுதான்
சினத்தை பிரசவிக்கிறது!
ஓர்மையாய்
நிற்கும்
ஒற்றை இடத்தையும்
பிரிக்க முனைவதுதான்
சகிக்க முடியவில்லை!
ஒவ்வொரு ஆண்டும்
இயற்கையின் அனர்த்தம்போல்
இந்த சிதைப்பும் நின்றபாடில்லை
கனத்த இதயத்தோடு கரையும்
கார்த்திகைத் திங்கள்
கூடவே மனத்தாங்கல்களையும்
தாங்கி நிற்கின்றன…
✍தூயவன்