சிரியா நாட்டின் வடமேற்கில் இத்லிப் நகரில் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் அங்கிருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அந்த பகுதியில், தாக்குதல்களுக்கு பயந்து கோழி பண்ணையில் சிலர் தங்களது குடும்பங்களுடன் வசித்து வந்துள்ளனர்.
ரஷ்ய படைகளின் தாக்குதலில், அவர்களில் 15 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். காயமடைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.
சேதமடைந்த கட்டிட பகுதிகளில் இருந்து உயிரிழந்த சிறுமி ஒருவரின் உடலை மீட்பு பணியாளர் மீட்டு வந்தது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. சிறுமியின் வாய் முழுவதும் உடைந்த கட்டிட பகுதிகள் நிரம்பி காணப்பட்டன. அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற ஆடை தூசுகளால் மூடி சாம்பல் நிறத்தில் காட்சி அளித்தது. கோழி பண்ணையில் இடிந்து கிடந்த பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட கோழிகளும் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் கடந்த 9 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோர் கொல்லப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது இருப்பிடங்களை விட்டு விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.