சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழ சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

You are currently viewing சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழ சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் கடந்த ஒரு வார காலமாகத் தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமாகி வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன்.

தமிழர்களின் பெருத்த தாய்நிலமான தமிழ்நாட்டிலேயே தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் மிகுந்த மனவேதனையைத் தருகிறது. ஈழத்தமிழர் எனும் ஒற்றைக் காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தை மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் திமுக அரசின் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது.

திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் தங்கள் விடுதலையை வேண்டி தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 8 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் ஈழச்சொந்தங்கள் 10 பேரை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டுகொள்ள மறுத்து வருவது பெரும் மனவலியை அளிக்கிறது.

ஈழச்சொந்தங்களுக்குத் தமிழ்நாட்டில் நிகழ்ந்தேறும் இத்தகைய கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத அதிகாரமற்ற கையறு நிலையும் ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.

இலங்கையை ஆளும் சிங்களப்பேரினவாத அரசு நிகழ்த்திய கோர இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, பன்னெடுங்காலமாக அந்நிலத்தில் கடைபிடிக்கப்படும் இனவெறி கொள்கையால் பாதிக்கப்பட்டு, நிர்கதியற்ற நிலையில் மறுவாழ்வுக்காக ஈழ உறவுகள் தாய்த்தமிழகத்திற்கு உயிரை பணையம் வைத்து வருகின்றனர். அவ்வாறு அடைக்கலம் புகும் ஈழச்சொந்தங்களுக்கு கருணை அடிப்படையில் வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்குமானால் அவற்றை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்குறிக்கலாம். அதற்கு மாறாக, அவர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, ஒவ்வொரு நாளும் துன்புறுத்தும் சிறைக்கூடங்களைச் சிறப்பு முகாம் என்று கூறுவது கேலிக்கூத்தானது.

இவ்வதைக்கூடங்கள் அடிப்படையான மனித உரிமைகளையே முற்றாக மறுத்து, ஈழச்சொந்தங்களுக்குப் பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

தற்போது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அங்குப் பசி, பட்டினியில் வாடும் தங்களது குடும்பங்களையும், உறவுகளையும் பார்க்க வேண்டும், அவர்களது துன்பத்தில் தோள்கொடுத்துத் துணைநிற்க வேண்டும் என்று போராடிவரும் ஈழச்சொந்தங்களது கோரிக்கை மிகமிக நியாயமானது. தமிழக முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்றைக்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கக்கூட மறுத்துவருவது சிறிதும் மனிதநேயமற்ற, அதன் கொடுங்கோன்மை மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் திமுகவின் கடந்த கால வாக்குறுதிகள் யாவும் தேர்தல் நேரத்து வெற்று நாடகங்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆகவே, திமுக அரசிற்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது சிறிதளவேணும் அக்கறை இருக்குமாயின், இனியும் இவ்விடயத்தில் இரட்டைவேடமிடுவதை நிறுத்தி, ஈழத்தமிழ்ச் சொந்தங்களைக் கண்காணிக்க திமுக அரசால் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட க்யூ பிராஞ்ச் எனப்படும் கொடும் காவல் பிரிவினை உடனடியாகக் கலைக்க வேண்டுமெனவும், சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஈழச்சொந்தங்களின் மறுவாழ்விற்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தற்போது பட்டினிப் போராட்டத்தால் உடல் நலிவுற்றிருக்கும் திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களின் உயிரைக்காக்க உயர் மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply