சிறிய தவறு செய்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 3-ந் தேதி ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த மோதலால் இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உருவானது. எனினும் தற்போது இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் சற்று தணிந்துள்ளது.
இந்த நிலையில், சிறிய தவறு செய்தாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதன் 40-ம் நாள் நினைவு நிகழ்ச்சி, தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஹொசைன் சலாமி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படும் இஸ்ரேல், சிரியாவில் ஈரானின் செல்வாக்கை சரிக்க அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டுள்ளது. நீங்கள் (அமெரிக்கா, இஸ்ரேல்) ஒரு சிறிய தவறை செய்தாலும். நாங்கள் உங்களை தாக்குவோம்’’ என்றார்.
மேலும் அமெரிக்காவை நம்ப வேண்டாம் என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், இஸ்ரேலால் ஆக வேண்டிய வேலைகள் முடிந்ததும் அமெரிக்கா அந்த நாட்டை தரையோடு தரையாக நசுக்கி விடும் எனவும் கூறினார்.