சிறிலங்கா படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் தொடர்பில் தீவிர அவதானம்!

You are currently viewing சிறிலங்கா படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் தொடர்பில் தீவிர அவதானம்!

இலங்கையில் பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தியிருப்பதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது.

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் தமது அரசாங்கம் மிகுந்த தீவிர அவதானம் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடப்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் மீளவலியுறுத்தினார்.

இலங்கையின் பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கி சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் பிரிட்டன் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று பாராளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

 மேற்குறிப்பிடப்பட்டவாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இலங்கையின் பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட கடத்தல்கள், தடுத்துவைப்புக்கள் மற்றும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட 15 தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனில் வசிக்கின்றனர்.

இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர், இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அத்தோடு அவ்வறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளுக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாடு என்ன? என்று டொனியா அன்டோனியஸ் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமன்டா மில்லிங், சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரிட்டன் அரசாங்கம் தீவிரமாகக் கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். அத்தோடு அண்மையில் அமைச்சர் தாரிக் அஹமட்டின் இலங்கை விஜயம் குறித்து சுட்டிக்காட்டிய அவர், அவ்விஜயத்தின்போது இலங்கையின் கரிசனைக்குரிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46ஃ1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு வழங்கும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments