யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்றிருந்த இராணுவ உறுப்பினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை சர்வதேச மன்னிப்பு சபை கண்டித்துள்ளது.
இலங்கையில், மனித உரிமை மீறல்களுக்கு இன்னும் உரியமுறையில் பொறுப்புக்கூறாதுள்ள நிலையில் குற்றவாளியான சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ உறுப்பினரின் விடுதலை என்பது முற்றிலும் வருந்ததக்க செய்தியாகும்.
இதன்மூலம் பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் கூட ஒருவர் இராணுவத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்பதை உணர்த்துவதாக மன்னிப்பு சபையின் தென்னாசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
2000ம்ஆண்டு மிரிசுவில் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் சுனில் ரட்நாயக்க என்ற இராணுவ உறுப்பினருக்கு 2015ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் 13 குற்றங்களுக்காக குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிறிய குற்றங்களுக்காக பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதவர்கள் சிறையில் உள்ளபோது, கொலைகளை புரிந்தவருக்கு மன்னிப்பு என்ற செய்தி வெளியாகியுள்ளதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி கடும் குற்றங்களை செய்தவர்களும் விடுவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
தன்னிச்சையான முடிவின் மூலம் நீதியை தலைகீழாக மாற்றுவது வெறுக்கத்தக்கது என்றும் சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.