சிறீலங்காவில் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்!

You are currently viewing சிறீலங்காவில் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்!

இலங்கையில் அரசாங்கத்தின் கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியீட்டியதை அடுத்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்துவதுடன், அதற்கு நீதி கோரும் அமைப்புகளின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை தனது அரசாங்கத்தில் உயர் பதவிகளில் நியமித்து வருகிறார் .

ஜனாதிபதியும், அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சவும், தற்போது பாதுகாப்புச் செயலாளராக உள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரைப் போன்று மோசமான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள்.

நாட்டில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சிவில் சமூகத்தின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தை ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது.

எனினும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையில் ஒருமித்த தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் சர்வதேச தரத்திலான பேச்சுரிமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனினும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நிலவிய அடக்குமுறை சூழலை நோக்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டை வேகமாக நகர்த்துகிறார்” என்றும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

பகிர்ந்துகொள்ள