இவ்வருடம் அமெரிக்காவிலும், இலங்கையிலும் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இவ்வாண்டு மிகமுக்கியமானதாகும். அதன்படி ஜனநாயகமானது வலுவானதாகவும், விசேட தேவையுடையோர் உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் குரல்களை ஓரிடத்தில் உள்ளடக்குவதாகவும் அமையவேண்டும் என சர்வதேச விசேட தேவையுடையோர் உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஜோபைடனின் சிறப்பு ஆலோசகர் சாரா மின்கரா வலியுறுத்தியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் சாரா மின்கரா, இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குடனான குறுநேர நேர்காணலிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் விசேட தேவையுடைய பெண்கள் சார்ந்து முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் என்னவென்று தூதுவர் ஜுலி சங்கினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்;
சர்வதேச மகளிர் தினம் மற்றும் அதற்குரிய மாதம் எனும்போது நாம் பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துவது குறித்துப் பேசுகின்றோம். அதேவேளை உலகளாவிய ரீதியில் மிக உயர்வான எண்ணிக்கையில் உள்ள விசேட தேவையுடைய பெண்களின் குரலையும், அவர்களது கருத்துக்களையும் செவிமடுப்பதற்கு நாம் முக்கியத்துவம் வழங்கவேண்டும்.
பாதுகாப்பு மறுசீரமைப்பு, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றுடன் தொடர்புடைய சவால்களைக் கையாளல் ஆகிய விடயங்கள் சார்ந்து இயங்கும்போது, அவற்றில் விசேட தேவையுடைய பெண்களின் உரிமைகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது பற்றியும் நாம் அவதானம் செலுத்தவேண்டும். இவ்விடயங்களில் நிலவும் தடைகளை நாம் உடைக்கவேண்டும்.
கேள்வி – அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம் எனும்போது, விசேட தேவையுடையோரின் கோணத்தில் அதன் பொருள் என்ன?
பதில் – இவ்வருடம் அமெரிக்காவிலும், இலங்கையிலும் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இவ்வாண்டு மிகமுக்கியமானதாகும். அதன்படி ஜனநாயகமானது வலுவானதாகவும், அனைத்துத் தரப்பினரதும் குரல்களை ஓரிடத்தில் உள்ளடக்குவதாகவும் அமையவேண்டும்.
இங்கு விசேட தேவையுடையோரையும் உள்வாங்கும்போது தேர்தலில் வாக்களித்தல், தேர்தலில் போட்டியிடல், கொள்கை வகுப்பில் ஈடுபடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அவர்கள் முகங்கொடுக்கும் சவால்களைக் கருத்திற்கொள்ளவேண்டும். விசேட தேவையுடையோரை வெறுமனே உடலியல் சார்ந்த கோணத்தில் மாத்திரம் அணுகமுடியாது.
மாறாக அவர்களை உடலியல், தொடர்பாடல், தொழில்நுட்பம் மற்றும் நடத்தை என சகல விதங்களிலும் அணுகவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது நான் இலங்கையில் இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன் விசேட தேவையுடையோரை உள்ளடக்கிய ஜனநாயகம், விசேட தேவையுடையோரின் உரிமைகள் தொடர்பான வரைபு என்பன குறித்து அவதானம் செலுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்