நாட்டு மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்குவதற்கான புதிய ஆயுதமாக ‘நாட்டின் உள்ளக சட்டங்கள்’ இலங்கை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டம் தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது கரிசனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, இச்சட்டம் குறித்து வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் த்யாகி ருவன்பத்திரன, இச்சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.
அதேபோன்று கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற குளறுபடிகளின் பின்னரான முதலாவது தேர்தலை இவ்வருடம் நடாத்துவதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், சர்வதேச மனித உரிமைசார் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான அரசியல் ரீதியிலான தன்முனைப்பை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை அரசாங்கம் புதிய சட்டவரைபுகளைத் தயாரிக்கும்போது அதனுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடுதல் உள்ளடங்கலாக உரிய செயன்முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புதிய சட்டவரைபுகளைத் தயாரிக்கும்போது சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதில்லை. மாறாக எப்பயனுமின்றி இருக்கும் உப குழுக்கள் அவற்றின் விருப்பத்தின் பேரில் தீர்மானங்களை மேற்கொள்வதுடன், அதனைத்தொடர்ந்து அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றது. இது தீவிர கரிசனைக்குரிய விடயங்களில் ஒன்றாகக் காணப்படுவதுடன், அதனை நாம் அலட்சியப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.