இலங்கையில் கொரோனா தொற்று தொடர்ந்து வரும் நிலையில் நேற்றைய தினமும் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்று ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் (மே-24) முன்னதாக 2 ஆயிரத்து 283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 687 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இலங்கையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என தனது பிரஜைகளை அமெரிக்கா ராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை பயணத்துக்கு எதிராக 4 ஆம் நிலை பயண எச்சரிக்கையை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டு அமெரிக்கா இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை. ஜப்பானுக்கான பயண எச்சரிக்கையையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வவிடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பயண வழிகாட்டுதலில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஜப்பானுக்கான பயணத்தை தவிர்க்குமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் புதிய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள தற்போதைய நிலையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட கொரோனா வைரஸ் புதிய திரிபுகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.