தமிழ்நாடு வாங்க உத்தேசித்திருந்த 4,00,000 ரேபிட் டெஸ்ட் கிட்களில் 24 ஆயிரம் டெஸ்ட் கிட்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஊரடங்கிலிருந்து தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து திங்கட்கிழமையன்று முடிவுசெய்யப்படுமென்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்வதற்காக அங்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர், ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். “சேலத்தை பொறுத்தவரை 9 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 9 இடங்களில் இருந்துதான் நோய் பரவல் ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் குணமடைந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்
மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. அவை எந்தெந்த தொழிற்சாலைகள் என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க நிதித் துறைச் செயலர் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழுவின் முடிவுகள் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படுமென்றும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சீனாவில் ஆர்டர் செய்திருந்த ரேபிட் டெஸ்ட் கிட்களில் 24,000 டெஸ்ட் கிட்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் மத்திய அரசு 12 ஆயிரம் டெஸ்ட் கிட்களை வழங்குவதாக சொல்லியிருப்பதாகவும் ஆனால், தமிழ்நாட்டிற்கு 50,000 கிட்கள் தேவை என வலியுறுத்தியிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
மத்திய அரசு போதுமான உபகரணங்களையோ நிதியையோ தரவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய அரசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மாநில அரசு தனியாக வாங்கி வருவதாகவும் மாநில அரசு ஆர்டர் செய்திருந்த 4 லட்சம் கிட்களில் இருந்துதான் தற்போது 24 ஆயிரம் கிட்கள் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறதா என்று கேட்டபோது, இது அதைப் பற்றிப் பேசுவதற்கான நேரமல்ல என்று தெரிவித்த முதல்வர், மாநில மக்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்று கூறினார்.