சீனாவில் மீண்டும் தலைதூக்கும் “கொரோனா” வைரஸினால், தலைநகர் “பெய்ஜிங்” இன் பகுதிகள் மூடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகரின் தென்பகுதியிலிருக்கும் மிகப்பெரிய மாமிச சந்தையிலிருந்தே இத்தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கும் சீன அதிகாரிகள், சுமார் 4000 கடைத்தொகுதிகளை கொண்ட இந்த சந்தையை முற்றாக மூடியுள்ளதுடன், முழு சந்தையையும் தொற்று நீக்கம் செய்தபின்பே அது மீண்டும் திறக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்கள்.
மாமிச சந்தையோடு தொடர்புடையவர்கள் என கருதப்படும் 10.000 பேருக்கு சுகாதார பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், நகரிலிருக்கும் ஏனைய சந்தைகளும் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் சீன செய்தி நிறுவனமான “Xinhua” தெரிவிக்கிறது.
தலைநகர் “பெய்ஜிங்” இல், கடந்த 50 நாட்களில் பல “கொரோனா” தொற்றுக்கள் அவதானிக்கப்பட்டிருப்பதாகவும், அவையனைத்தும் குறித்த மாமிச சந்தையிலிருந்தே பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதே நேரத்தில், தலைநகரின் மக்கள் குடியிருப்பு பகுதிகள் உட்பட, பாடசாலைகள், குழந்தைகள் காப்பகங்கள் என்பன மூடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.