கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே சீனாவின் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.வைரஸ் குறித்த தகவலை சொல்லாமல் மறைத்தது. பொருளாதார சரிவுக்கு காரணமாக இருந்தது. பொருளாதார சரிவை காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்த நிறுவனங்களை வாங்கியது போன்ற பல்வேறு காரணங்களால் சீனா மீது பல நாடுகளில் கோபத்தில் உள்ளன.
குறிப்பாக, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவை முடக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகின்றது. இந்த நிலையில், சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார ரீதியாக சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர இந்த 8 நாடுகள் முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்று சேர்ந்துள்ளன.
சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். அதன்படி முதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, சீனாவின் நிறுவனங்கள் ஏகபோக மாக தனித்து இயக்குவது ஆகியவற்றை எதிர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது.
அதன் பின், சீனாவின் இராணுவம் அண்டை நாடுகளின் எல்லையில் அத்துமீறுவது, தென் சீன கடல் எல்லையில் அத்துமீறுவது ஆகிய செயல்களை தடுக்க வேண்டும் என்று ம் இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஹாங்காங் பிரச்சினையில் சீனாவின் செயலை தடுக்க வேண்டும். ஹாங்காங்கை சீனா மொத்தமாக கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. சீனா இதை உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகிறது. ஆனால் சீனா ஹாங்காங்கிற்கு கொடுத்த வாக்கை மீறி விட்டது. இதனால் ஹாங்காங்கில் அமைதியை கொண்டு வரும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சீனா மற்ற நாடுகளுடன் நட்பாக இருப்பதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனா தற்போது ரஷ்யா, தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நட்பாக இருக்கிறது.
சீனாவின் இந்த உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்க வேண்டும். உலக அளவில் சீனாவை தனித்து விட வேண்டும் என்று இந்த 8 நாட்டு தலைவர்கள்முடிவு செய்துள்ளதாகவும், இந்த குழுவில் ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகள் இருப்பது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவுக்கு எதிரன ‘எட்டு நாடுகளின் ஐபிஏசி கூட்டணி’ சீன நெட்டிசன்கள், ஒரு கேலிக்கூத்து என கேலி செய்துள்ளனர்.
காலங்கள் மாறிவிட்டன, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததைப் போல சீனா கொடுமைப்படுத்தப்படுவதை அனுமதிக்காது என்றும் சில மேற்கத்திய அரசியல்வாதிகள் தங்களது பனிப்போர் மனநிலையை கைவிட்டு சீனாவைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பிரபலமான சீன ஏகாதிபத்திய எதிர்ப்பு யிஹெதுயான் இயக்கத்தை அடக்குவதற்காக 1900 ஆம் ஆண்டில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியவை சீனாவிற்கு அனுப்பிய படையெடுப்பை “எட்டு நாடுகளின் கூட்டணி” குறிக்கிறது. அவர்கள் பெய்ஜிங் மற்றும் பிற நகரங்களை சூறையாடி கொள்ளையடித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சில சீன நெட்டிசன்கள், இது சீனாவைத் தாக்க அமெரிக்க அரசியல்வாதிகள் செய்த சமீபத்திய கேலிக்கூத்து என்று கூறி உள்ளனர். “அப்படியென்றால் இது புதிய எட்டு நாடுகளின் கூட்டணி? ஏகாதிபத்தியம்? கொள்ளை? திருட்டு? ஊழல்? சீனா உட்பட பிற நாடுகளிலிருந்து நீங்கள் கொள்ளையடித்த அல்லது திருடிய அனைத்தையும் திருப்பித் தருவீர்களா?” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.