சீனாவை முடக்க ஒன்று சேரும் மூன்று முன்னணி நாடுகள்!

You are currently viewing சீனாவை முடக்க ஒன்று சேரும் மூன்று முன்னணி நாடுகள்!

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன. இந்த கூட்டு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும். 

ஆக்கஸ்(AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந்த உடன்பாட்டில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருக்கிறது.

ஆஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.

ஆனால் இந்த ஒப்பந்தப்படி நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான தளவாடங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலே பெற வேண்டும் என்பதால், இந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

“ஆக்கஸின் கீழ் முதல் முயற்சியாக , அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்தக் கூட்டு முயற்சி இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும். நமது நலன்களுக்கும் மதிப்புக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

“ஆஸ்திரேலியாவின் படைத் திறனை ஒரு குறிப்பிட்ட, அடையக் கூடிய கால அளவுக்குள் மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும்” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இருப்பினும் அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சைபர் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, “கடலுக்கு அடியில் கூடுதலாகத் திறன்” ஆகியவற்றிலும் இந்தக் கூட்டு முயற்சி கவனம் செலுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

“இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும்,, மக்களைக் காக்கவும் இன்றியமையாதது” என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் பிரிட்டனின் எச்எம்எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பல் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டது.. இதில் அமெரிக்க ராணுவத்தினரும் உபகரணங்களும் இருந்தன.

இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்ட, தீர்க்கப்படாத தகராறுகள் நீடித்திருக்கக் கூடிய, மோதல் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியாகும் என்று பிரிட்ன், அமெரிக்க, ஆஸ்திரேலியக் கூட்டறிக்கை கூறுகிறது.

“இது சைபர்ஸ்பேஸ் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் முன்னணியில் இருக்கிறது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஒரே நேரத்தில் பங்கேற்று கூட்டுத் திட்டம் குறித்து அறிவித்திருப்பது, இந்த உடன்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பிரிட்டன் அரசும் இதையே கூறுகிறது.

ஆனால் இந்த உடன்பாடு இரு முக்கிய நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவது நட்பு நாடான பிரான்ஸ். நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்த நாடு ஆஸ்திரேலியாவுடன் டீசலில் இயங்கும் நீர்மூழ்கியை கட்டுவது தொடர்பாக உடன்பாடு செய்திருந்தது. இப்போது இந்த உடன்பாடு முறிக்கப்படுகிறது.

இரண்டாவது நாடு சீனா. இந்த உடன்பாடு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறி வந்தாலும், இன்னொரு புறம், இந்தப் பிராந்தியத்தில் செழிப்பு, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதும், சட்டத்தின் அடிப்படையிலான அமைதி நிலையை ஆதரிப்பதும் இந்த உடன்பாட்டின் நோக்கம் என்றும் பிரிட்டன் அரசு கூறுகிறது.

அதனால் இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவின் ராணுவச் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து பிரிட்டன், அணெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கவலைகளைப் பகிர்ந்து கொள்வது ஒன்றும் ரகசியம் அல்ல.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply