டெல்லியின் மஜ்னு கா தில்லா பகுதியில் வசிக்கும் ஒரு பெண், போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் “உங்கள் மகள் ரூ.3,500 கடன் பெற்றிருப்பதாகவும், அதை செலுத்தாவிட்டால் உங்கள் மகளின் நிர்வாண படம் இணையதளத்தில் வெளியிடப்படும்” என்று மிரட்டப்பட்டதாக கூறியிருந்தார். இதுபோன்ற வேறுசில புகார்களும் பதிவாகின.
இதையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது கிழக்கு கைலாஷில் உள்ள ஒரு கால்சென்டர் ஊழியர்கள் சீன செல்போன் கடன் செயலி மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கடன் தொகைக்கு கூடுதல் வட்டி கட்டச் சொல்லி நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.
மேலும் கூறிய தொகையை கட்டாவிட்டால் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர். மோசடி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த கால் சென்டரில் வேலை செய்த 17 ஊழியர்கள், அவர்களை வழி நடத்திய அமித் என்பவர் ஆகிய 18 பேர் கைது செய்யப்பட்டனர். கூடுதல் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.