உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் டாலர்களை கூடுதலாக நிதியுதவி வழங்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
“WHO” என்று அழைக்கப்படுகிற உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. இந்தியா உள்பட 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஆனாலும் இந்த நிறுவனம், செயல்படுவதற்கான முக்கிய நிதி பங்களிப்பை அமெரிக்காதான் வழங்கி வருகிறது.
தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி, பெருத்த உயிர்ச்சேதங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
நிதியுதவியை நிறுத்த உள்ளதாக, அமெரிக்கா தெரிவித்த நிலையில், சீனா இந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சீன, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் (Wang Yi) தனது டுவிட்டரில், ஏற்கனவே 20 மில்லியன் உதவி வழங்கிய நிலையில், கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது. இது வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவும் என்று பதிவிட்டுள்ளார்.